இனி தேர்தலில் கலந்துகொள்ள போவதில்லை: கர்நாடக பாஜகவின் கேஎஸ் ஈஸ்வரப்பா முடிவு
மே 10-ம் தேதி நடைபெறும் கர்நாடக தேர்தலில் தான் போட்டியிடப் போவதில்லை என்று பாஜக மூத்த தலைவர் கே.எஸ்.ஈஸ்வரப்பா இன்று(ஏப் 11) தெரிவித்துள்ளார். கர்நாடக தேர்தல் வேட்பாளர்களை அறிவிப்பதில் பாஜக கட்சி தாமதம் செய்வதாக செய்திகள் வெளியாகி உள்ள நிலையில், ஈஸ்வரப்பா இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். "தேர்தல் அரசியலில் இருந்து விலகுகிறேன்" என்று ஈஸ்வரப்பா பாஜக தலைவர் ஜேபி நட்டாவுக்கு எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார். "கடந்த 40 ஆண்டுகளில் கட்சி எனக்கு நிறைய பொறுப்புகளை வழங்கியுள்ளது. ஒரு பூத் பொறுப்பாளராக இருந்த என்னை மாநில கட்சித் தலைவராக மாற்றியது. துணை முதல்வர் என்ற பெருமையும் எனக்கு கிடைத்தது" என்று மேலும் அவர் எழுதியுள்ளார்.
முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக இன்னும் அறிவிக்கவில்லை
ஈஸ்வரப்பா கர்நாடகாவின் துணை முதல்வராகவும், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். ஜூன் மாதம் ஈஸ்வரப்பாவுக்கு 75 வயதாகிறது. தலைவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்கும் அதிகாரப்பூர்வ பதவிகளை வகிக்கவும் பாஜகவில் வயது வரம்பு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு விதி விலக்குகளும் அவ்வபோது இருந்து கொண்டு தான் இருக்கிறது. 224 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவைத் தேர்தலுக்கான முதல் வேட்பாளர் பட்டியலை பாஜக இன்னும் அறிவிக்கவில்லை. இந்நிலையில், இந்த முடிவை எடுத்திருக்கும் ஈஸ்வரப்பா, இது தன்னுடைய தனிப்பட்ட முடிவு என்றும் கூறியுள்ளார்.