முடிவடைந்தது வாக்கு எண்ணிக்கை: கர்நாடகாவில் காங்கிரஸுக்கு தனி பெரும் வெற்றி
2023 கர்நாடக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கெடுப்பு மே 10ஆம் தேதி நடத்தப்பட்டது. அதை தொடர்ந்து, இன்று(மே 13) அந்த வாக்குகள் எண்ணப்பட்டன. 224 இடங்களை கொண்ட கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் 113 இடங்களை கைப்பற்றினால் தனி பெரும்பான்மை கிடைக்கும் என்ற நிலையில், காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் தனித்து நின்று வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸை தொடர்ந்து, பாஜக 65 இடங்களிலும், மதசார்பற்ற ஜனதா தளம் 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அது போக, கல்யாண ராஜ்ய பிரகதி பக்ஷா மற்றும் சர்வோதய கர்நாடக பக்ஷா ஆகிய கட்சிகள் தலா 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளன. இரண்டு தொகுதிகளில் சுயேட்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.
34 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸுக்கு கிடைத்த மாபெரும் வெற்றி
காங்கிரஸ் கட்சி கிட்டத்தட்ட 43% வாக்குகளை பெற்றுள்ளது. பாஜக 35.9% வாக்குகளையும், மதசார்பற்ற ஜனதா தளம் 3.32% வாக்குகளையும் பெற்றுள்ளன. முதல் முறையாக கர்நாடகாவில் போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சி 0.58% வாக்குகளை பெற்றுள்ளது. மேலும், நோட்டாவுக்கு 0.69% வாக்காளர்கள் வாக்களித்துள்ளனர். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்திய 2.6 லட்சத்துக்கும் அதிகமான வாக்காளர்கள் நோட்டாவை தேர்ந்தெடுத்துள்ளனர். நோட்டா என்றால் 'யாருக்கும் ஓட்டளிக்கவில்லை' என்று அர்த்தமாகும். 34 ஆண்டுகளுக்குப் பிறகு, காங்கிரஸ் அதிகமான வாக்குகள் மற்றும் இடங்களைப் பெற்று வெற்றி பெற்றுள்ளது. 1989ஆம் ஆண்டு வீரேந்திர பாட்டீலின் ஆட்சிக் காலத்தில் காங்கிரஸ் 43.76% வாக்குகளைப் பெற்று 178 இடங்களை வென்றது. அதற்கு பிறகு, இப்போது தான் காங்கிரஸுக்கு இவ்வளவு வாக்குகள் கிடைத்துள்ளன.