சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்துவது குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் பேச்சு
டெல்லியில் நடைபெற்ற ராகுல் காந்தியின் 'பாரத் ஜோடா யாத்திரை'-யில் கமலஹாசனும் அவரது மக்கள் நீதி மய்யக் கட்சியை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். இதனையடுத்து, இந்த யாத்திரியில் கலந்துகொண்டோருக்கு பாரட்டு தெரிவிக்கும் நிகழ்வு இன்று சென்னையில் நடந்தது. இதில் கலந்துகொண்ட மக்கள் நீதி மய்ய தலைவர் கமலஹாசன் கட்சியினர் முன்னிலையில் உரையாற்றினார். அப்போது அவர், 'பாஜக மதத்தை வைத்து அரசியல் செய்து வருகிறது, அதனை நாம் எதிர்க்க வேண்டும். ஒருபோதும் தமிழகத்தில் மதப்பிரிவினை ஏற்படுத்த முடியாது' என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், 'மத அரசியல் இந்தியாவை சிதைத்து விடாமல் நாம் தடுக்க வேண்டும்' என்றும் தெரிவித்துள்ளார்.
சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரியுள்ளதாக கமலஹாசன் தகவல்
ஒற்றுமை நிலைநாட்டும் வண்ணம் ராகுலின் யாத்திரை அமைந்தது என்று இவ்விழாவில் கூறிய கமல், சென்னையில் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இது தனது நீண்ட நாள் ஆசை என்று கூறிய அவர், அதற்கான அனுமதிகளை கோரியுள்ளதாகவும் கூறினார். அனுமதி கிடைக்கும் பட்சத்தில், அதற்கான பணிகளை துவங்க தயாராக உள்ளோம் என்றும் கூறினார். ஜல்லிக்கட்டிற்காக சென்னை மெரினாவில் மாபெரும் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், அங்கேயே இவ்வருடம் ஜல்லிக்கட்டு நடத்தினால் சிறப்பாக நினைவுகூரத்தக்கதாக அமையும் என்றும் அவர் பேசினார். அனுமதி கிடைத்தால் நகரவாசிகளுக்கும் ஜல்லிக்கட்டின் அருமையை எடுத்துரைக்க முடியும் என்பதே அவரின் கூற்றாகும்.