மார்ச் 1 முதல், விண்ணப்பித்த மகளிருக்கும் ரூ.1,000 வழங்கப்படும்: அறிக்கை
செய்தி முன்னோட்டம்
மகளிர் உரிமை தொகைக்கு விண்ணப்பித்த அனைத்து மகளிருக்கும், மார்ச் 1 முதல் மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு முடிவுசெய்துள்ளது என தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது.
கலைஞர் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாகவும், தேர்தல் வாக்குறுதியின் ஒரு பகுதியாகவும், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், மகளிருக்கு மாதம் 1,000 ரூபாயை வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு துவங்கியது.
இதற்காக, 2 கோடி ரேஷன் கார்டு தாரர்களின் வீடுகளில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 1.66 கோடி பேர் விண்ணப்பித்திருந்தனர்.
அவர்களின் விண்ணப்பங்கள் பரீசீலிக்கப்பட்டு, அரசின் விதிகளை பின்பற்றி தேர்ந்தெடுக்கப்பட்ட 1.15 கோடி பேரின் வங்கி கணக்குகளில் மாதந்தோறும் ரூ.1,000 உரிமை தொகை அனுப்பப்பட்டு வருகிறது.
விரிவாக்கம்
திட்டத்தினை விரிவாக்க தமிழக அரசு முடிவு எனத்தகவல்
இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்தும், அதை பெற தகுதியில்லை என நிராகரிக்கப்பட்டவர்களும், இன்னும் விண்ணப்பிக்க இயலாதவர்களுக்கும் இருப்பதாக கூறப்பட்டது.
அவர்கள் மகளிர் உரிமை தொகையை பெறமுடியாமல் அதிருப்தியுடன் உள்ளனர் எனக்கூறப்பட்ட நிலையில், இது குறித்து மாநில அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
அதன் தொடர்ச்சியாக,"அரசுக்கு நிதி சிக்கல் உள்ளதால் அனைத்து மகளிருக்கும் உரிமை தொகை வழங்க முடியவில்லை, ஆனால் விரைவில் நல்ல முடிவுகள் அறிவிக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2026 சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளதால், அதற்கு முன்னதாக முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளான மார்ச் 1 முதல் அனைத்து விண்ணப்பித்த மகளிருக்கும் மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.