LOADING...
இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் இன்று பதவியேற்பு; அவரது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகள் ஒரு பார்வை
தலைமை நீதிபதியாக (CJI) நீதிபதி சூர்யா காந்த் இன்று பதவியேற்க உள்ளார்

இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யா காந்த் இன்று பதவியேற்பு; அவரது வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்புகள் ஒரு பார்வை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 24, 2025
07:53 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் 53வது தலைமை நீதிபதியாக (CJI) நீதிபதி சூர்யா காந்த் இன்று பதவியேற்க உள்ளார். இவர் நீதிபதி பி.ஆர்.கவாய்க்கு பிறகு இந்த பொறுப்பை ஏற்கிறார். ஹரியானாவின் ஹிசார் மாவட்டத்தில் ஒரு நடுத்தர குடும்பத்தில் பிறந்த நீதிபதி சூர்யா காந்த், நாட்டின் உயரிய நீதித்துறை பதவிக்கு உயர்ந்தவர். இவர் பிப்ரவரி 9, 2027 வரை, சுமார் 15 மாதங்கள் தலைமை நீதிபதியாகச் செயல்படுவார். நீதிபதி சூர்யா காந்தின் உச்ச நீதிமன்றப் பணிகள், அரசியலமைப்பு மற்றும் பொதுநலன் தொடர்பான முக்கியத் தீர்ப்புகளால் குறிக்கப்படுகின்றன. குறிப்பிடும்படியாக, ஆயுதப் படைகளுக்கான 'ஒரு பதவி ஒரு ஓய்வூதியம்' (One Rank-One Pension) திட்டத்தை நிலைநிறுத்தினார்.

முக்கியத் தீர்ப்புகள்

அவரது முக்கியத் தீர்ப்புகள் மற்றும் பங்களிப்புகள்

சட்டப்பிரிவு 370 நீக்கம்: ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டதை எதிர்த்த வழக்குகளை விசாரித்த அமர்வில் இவரும் இடம்பெற்றிருந்தார். பெகாசஸ் உளவு மென்பொருள்: சட்டவிரோத உளவு குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஒரு குழுவை நியமித்த அமர்வில் இடம்பெற்றிருந்தார். "தேசியப் பாதுகாப்பின் பெயரால் அரசுக்கு 'சலுகை' வழங்க முடியாது" என்று முக்கியமாக கருத்துத் தெரிவித்தார். தேசத்துரோகச் சட்டம்: காலனித்துவ காலச் சட்டமான தேசத்துரோகச் சட்டத்தை நிறுத்திவைத்து (Abeyance), மத்திய அரசு மறுஆய்வு செய்யும் வரை புதிய FIR பதிவு செய்யக் கூடாது என்று உத்தரவிட்ட அமர்வில் இருந்தார். அத்துடன், உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் உட்பட அனைத்து வழக்கறிஞர்கள் சங்கங்களிலும் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

முக்கிய இலக்குகள்

தலைமை நீதிபதியாக அவரது முக்கிய இலக்குகள்

சூர்யா காந்த், தனது பதவிக் காலத்தில் கவனம் செலுத்தவுள்ள இரண்டு முக்கியப் பணிகளைப் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்: உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சுமார் 92,000 வழக்குகள் மற்றும் உயர் நீதிமன்றங்கள், கீழமை நீதிமன்றங்கள் என நாடு முழுவதும் உள்ள சுமார் 43 மில்லியன்(4 கோடியே 30 லட்சம்) வழக்குகளின் நிலுவையை விரைவாகக் குறைப்பதே இவரது முதல் இலக்காகும். சர்ச்சைக்குரிய பிரச்னைகளைத் தீர்ப்பதற்கான மாற்று வழிமுறையாக, மத்தியஸ்தத்தை ஒரு Game Changer என்று அவர் விவரித்தார். "மக்கள் ஏன் நீதிமன்றங்களுக்கு வர வேண்டும்? நீதிமன்றங்களுக்கு வந்தால் மட்டுமே தங்கள் பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும் என்று ஏன் நினைக்கிறார்கள்?" என்று கேள்வி எழுப்பிய அவர், மாற்று தீர்வு முறையை தீவிரமாக ஊக்குவிப்பேன் என்று உறுதியளித்துள்ளார்.