சர்ச்சைக்குரிய பதிவிட்டதற்காக ஜேபி நட்டாவுக்கு கர்நாடக காவல்துறை நோட்டீஸ்
கர்நாடக மாநில பாஜக, சமூக வலைத்தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவிட்டதால், பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் அக்கட்சியின் ஐடி செல் தலைவர் அமித் மாளவியா ஆகியோருக்கு பெங்களூரு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது. அந்த தலைவர்களுக்கு பெங்களூருவில் உள்ள ஹைகிரவுண்ட்ஸ் காவல்துறையின் புலனாய்வு அதிகாரி இன்று நோட்டீஸ் அனுப்பினார். இந்த வீடியோ தொடர்பாக பெங்களூரு காவல்துறையில் ஆஜராக ஜேபி நட்டா மற்றும் அமித் மாளவியா ஆகியோருக்கு ஒரு வாரம் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. அந்த சர்ச்சைக்குரிய பதிவில், பட்டியல் சாதிகள், பழங்குடியினர் மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இடஒதுக்கீடு வழங்குவதைவிட முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் ஆதரவாக இருப்பதாக குற்றம்சாட்டும் வீடியோ இருந்தது.
பாஜகவின் பதிவை நீக்குமாறு ட்விட்டர் தளத்திடம் தேர்தல் ஆணையம் கோரிக்கை
பிரதமர் நரேந்திர மோடி உட்பட பல பாஜக தலைவர்கள் இதே குற்றச்சாட்டை காங்கிரஸ் மீது சுமத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. வகுப்புவாதத்தை தூண்டும் விதமாக பாஜகவின் பதிவு இருந்ததாக கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி பரமேஸ்வரா கூறியுள்ளார். "அவர்கள்(நட்டா மற்றும் மாளவியா) ஒரு அறிக்கை கொடுத்த பிறகு அல்லது அவர்களின் அறிக்கையை நியாயப்படுத்திய பிறகு, என்ன நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதைப் பார்ப்போம்," என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். பாஜகவின் அந்த சர்ச்சைக்குரிய பதிவை நீக்குமாறு ஏற்கனவே கர்நாடகா பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், பாஜக அந்த பதிவை நீக்கவில்லை. இதனையடுத்து, அதை பதிவை நீக்குமாறு ட்விட்டர் தளத்திடம் தேர்தல் ஆணையம் இரண்டு நாட்களுக்கு முன் கேட்டுக்கொண்டது.