₹100 கோடி மோசடியில் ஈடுபட்ட திருச்சி நகைக்கடை-அமலாக்கத்துறை விசாரணையில் அம்பலம்
திருச்சியை தலைமையிடமாக கொண்டு, சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மற்றும் புதுச்சேரியில் இயங்கி வரும் நகை நிறுவனம், ₹100 கோடி மதிப்பிலான "பொன்சி திட்டம்" நடத்தியதற்காக அமலாக்கத்துறையின் சோதனையில் அம்பலமாக உள்ளது. திருச்சியில் கடந்த இரண்டு நாட்களாக அமலாக்கத்துறை மற்றும் வருமான வரித்துறையினர், சில நகைக்கடைகளில் சோதனை நடத்தி வந்த நிலையில், தற்போது இது குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நிதி நிறுவனங்கள் நடத்தி வந்த கடைகள், கடந்த செப்டம்பர் மாதம் திடீரென மூடப்பட்டது. புகாரின் அடிப்படையில், திருச்சியில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவினர், அதன் உரிமையாளர் மதன் என்பவர் மீது வழக்கு செய்திருந்தனர்.
சோதனை குறித்து அமலாக்கத்துறை அறிக்கை
நகை கடையில் சோதனை மேற்கொண்டது குறித்து நேற்று, அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டிருந்தது. அந்த அறிக்கையில் "பொன்சி திட்டம்" நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட சிலர் மீது, சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்ட(பிஎம்எல்ஏ) விதிகளின்படி, பொருளாதார குற்றப்பிரிவு பதிந்திருந்த வழக்கில், திங்கட்கிழமை சோதனை நடத்தியதாக கூறியுள்ளது. சோதனையின் போது, ₹23.7 லட்சம் ரொக்கம், 11.6 கிலோ எடையுள்ள தங்கம் மற்றும் சில குற்ற ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. தங்க முதலீட்டுத் திட்டத்தின் பேரில், அதிக வட்டி தருவதாக வாடிக்கையாளர்களிடமிருந்து ₹100 கோடி வசூல் செய்த பிரணவ் ஜூவல்லர்ஸ் நிறுவனம், உறுதி அளித்தபடி வட்டியும் வழங்கவில்லை, அசலும் வழங்கவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அமலாக்கத்துறை விசாரணையில் வெளிவந்த தகவல்கள் என்ன?
நிறுவனமும் குற்றம் சாட்டப்பட்டவர்களும் தங்க நகைகள் அல்லது தங்க ஆபரணங்களை வாங்குவதாகக் கூறி, ஷெல்(வரியைப்பு செய்ய பயன்படுத்தப்படும் போலி நிறுவனங்கள்) நிறுவனங்கள் மற்றும் ஜமாகர்ச்சி(கருப்பு பணத்தை வெள்ளையாக்குபவர்கள்) வேலைகளுக்காக, நிதியைத் திருப்பி பொதுமக்களை ஏமாற்றியது தெரியவந்தது. ஜமாகர்ச்சிகள், கணக்கில் காட்டப்படாத வருமானத்தை மீண்டும் கணக்கில் கொண்டு வந்து, அவற்றை முறையான பரிவர்த்தனைகளாகக் காட்டுவதன் மூலம் நிறுவனங்களுக்கு மோசடி செய்ய அல்லது வரி ஏய்ப்பு செய்ய உதவுகிறார்கள். பிரணவ் ஜுவல்லர்ஸ் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள சிலர் ஜமாகர்ச்சிகள் எனவும், அந்நிறுவனத்திற்கு ₹100 கோடி ரூபாய்க்கு மேல் கருப்பு பணத்தை வெள்ளையாக உதவியதாகவும் ஒப்புக்கொண்டதாக அமலாக்கத்துறை கூறுகிறது.
சோதனை குறித்து அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள தகவல்கள்
பொன்சி திட்டம் என்றால் என்ன?
இத்தாலியை சேர்ந்த சார்லஸ் போன்சி(பொன்சி) என்பவர் 1920 ஆம் ஆண்டு திட்டத்தை உருவாக்கியதால் இத்திட்டம், பொன்சி திட்டம் என அழைக்கப்படுகிறது. அடிப்படையில் மோசடி செய்யும் நோக்கோடு இத்திட்டம் தொடங்கப்பட்டது. குறைந்த காலத்தில் பணத்திற்கு அதிக வட்டி வழங்குவதாக கூறி, தமிழ்நாட்டில் நடைபெறும் பெரும்பான்மையான மோசடிகள் 'பொன்சி திட்டம்' வகையையே சாரும். பணம் மட்டுமல்லாது ஈமு கோழி உள்ளிட்ட விலங்குகள் மூலமும், இவ்வகையான மோசடிகள் அரங்கேறி வருகின்றது குறிப்பிடத்தக்கது.