மோடியிடம் கோரிக்கை வைத்த சிறுமி - பள்ளியை சீரமைக்கும் அதிகாரிகள்
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது பள்ளிக் கட்டிடத்தை சீரமைக்க உதவுமாறு பிரதமர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்து வீடியோவை வெளியிட்டு இருந்தார். இந்த வீடியோ வைரலானதை அடுத்து, ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் கதுவா மாவட்டத்தில் அமைந்துள்ள அரசு பள்ளி ஒன்றில் இருந்து சீரத் நாஸ் என்ற 3-ஆம் வகுப்பு படிக்கும் சிறுமி மோடி ஜி எங்களுக்கு நல்ல பள்ளி உருவாக்கி தாருங்கள் என்றும், அமர்வதற்கு இருக்கைகள் இல்லை. தரை மோசமாக உள்ளது. பள்ளிக்கட்டிடத்தை சீரமைத்து தாருங்கள் என பேசியுள்ளார். பிரதமரிடம் பல கோரிக்கைகளை விடுத்த அந்த சிறுமியின் துணிச்சலுக்கு பலரும் பாராட்டி வந்தனர்.
பிரதமரிடம் பள்ளியை சீரமைக்க கூறிய சிறுமி - சீரமைக்கும் பணியில் இறங்கிய அதிகாரிகள்
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் உடனடியாக பள்ளியை மாற்றியமைக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. ஏற்கனவே பள்ளியை சீரமைக்க 91 லட்சம் மதிப்பில் திட்டத்திற்கு அனுமதி அளித்துள்ளது. ஆனால் நிர்வாக அனுமதியில் சில பிரச்சினைகள் எழுந்ததால் பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது அந்த பணிகள் மீண்டும் சீரமைக்கப்படுகின்றன என பள்ளியை பார்வையிட்ட சர்மா தெரிவித்துள்ளார். மேலும் அதிகாரி அவர் தெரிவிக்கையில் 100 பள்ளிகள் யூனியன் பிரதேசத்தின் தொலைத்தூர பகுதிகளில் இயங்கி வருவதாகவும், இந்தப் பள்ளிகள் அனைத்திலும் முறையான மற்றும் நவீன வசதிகளை உறுதி செய்வதற்கான விரிவான திட்டத்தை அரசாங்கம் ஏற்கனவே வகுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.