
காஷ்மீர்-பயங்கரவாதியிடம் இருந்து சென்ட் பாட்டில் வடிவத்திலான வெடிகுண்டு பறிமுதல்
செய்தி முன்னோட்டம்
காஷ்மீரில் நார்வால் என்னும் பகுதியில் கடந்த 21ம் தேதி குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நடந்தது.
இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதில் சந்தேகத்தின் பேரில், அரசு பணியில் இருக்கும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
ஆர்ப் என்ற அந்நபர் லஸ்கர்-இ-தொய்பா பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.
ரியாசி பகுதியில் வசித்து வரும் இவரது மாமா பாகிஸ்தானை சேர்ந்தவராவார்.
இவரிடம் மேற்கொண்ட விசாரணையில் இவருக்கும் நார்வால் பகுதி குண்டுவெடிப்புக்கும் சம்பந்தம் உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து அவரிடமிருந்த சென்ட் பாட்டில் வடிவிலான சக்திவாய்ந்த வெடிகுண்டு(ஐ.இ.டி) கைப்பற்றப்பட்டுள்ளது.
இதுபோன்ற வெடிகுண்டு பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும் என்றும் கூறப்படுகிறது.
காவல்துறை டிஜிபி
சென்ட் பாட்டில் வெடிகுண்டு-திறந்தாலோ, அழுத்தினாலோ வெடிகுண்டு வெடித்து விடும் என தகவல்
இதுகுறித்து காஷ்மீர் காவல்துறை டிஜிபி தில்பாக் சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், சென்ட் வடிவிலான சக்திவாய்ந்த வெடிகுண்டு பறிமுதல் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
இதனை யாரேனும் திறக்க முயன்றாலோ, அழுத்த முயன்றாலோ வெடிகுண்டு வெடித்துவிடும் என்று கூறினார்.
மேலும், இதுவரை வெடிக்கக்கூடிய பொருட்கள் கொண்ட ஐ.இ.டி. ஸ்டிக்கி வெடிகுண்டுகள் மற்றும் டைம் பாம்'களையே கைப்பற்றி உள்ளோம்.
ஆனால், இது சென்ட்பாட்டில் போன்ற உருவத்துடன், உள்ளே வெடிப்பொருட்கள் உள்ளதை முதன்முறையாக காண்கிறோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட வெடிகுண்டை தங்களுடைய சிறப்புப்படையினர் கையாளுவார்கள் என்று கூறிய டிஜிபி, தாங்கள் இதனை தொடக்கூட இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் இது எவ்வளவு தீங்கு தரக்கூடியது என்றும், எவ்வளவு சக்தி வாய்ந்தது என்றும் கண்டறியப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.