எல்லை தாண்டி கடத்தப்பட்ட இந்திய தேயிலை விவசாயி: பங்களாதேஷ் எல்லையில் பரபரப்பு
செய்தி முன்னோட்டம்
மேற்கு வங்க மாநிலத்தில் இந்தியா - பங்களாதேஷ் எல்லை பகுதியில் அமைந்துள்ள தேயிலை தோட்டத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த இந்திய விவசாயி ஒருவரை பங்களாதேஷை சேர்ந்த கும்பல் எல்லை தாண்டி கடத்திச் சென்றுள்ள சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. சவுல்ஹாட்டி எல்லைப் பகுதியில் உள்ள தசாப்பாரா கிராமத்தை சேர்ந்த 35 வயதான தீபங்கர் கோப் என்ற விவசாயி, வேலிக்கு அப்பால் உள்ள தனது 6 பிகா தேயிலை தோட்டத்தில் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்துக் கொண்டிருந்தார். அப்போது பங்களாதேஷைச் சேர்ந்த சுமார் 20 பேர் கொண்ட கும்பல் எல்லை தாண்டி வந்து அவரைச் சுற்றி வளைத்துக் கடத்திச் சென்றுள்ளது.
கடத்தல்
பழிவாங்கும் நடவடிக்கையாக கடத்தல்
கடந்த ஆகஸ்ட் 6 அன்று, எல்லையில் முள்வேலியை வெட்டி சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற பங்களாதேஷ் நபர் ஒருவரை இந்திய எல்லை பாதுகாப்பு படையினரும் (BSF) உள்ளூர்வாசிகளும் பிடித்துக் காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.
அதற்கு பழிவாங்கும் நோக்கில் இந்த கடத்தல் சம்பவம் நடத்தப்பட்டுள்ளதாக தீபங்கரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து எல்லையில் பீதி நிலவி வரும் நிலையில், விவசாயியை பாதுகாப்பாக மீட்க எல்லை பாதுகாப்பு படை உடனடி நடவடிக்கை மேற்கொண்டது.
பங்களாதேஷ் எல்லைக் காவல் படையுடன் ஃபிளாக் மீட்டிங் எனப்படும் அவசர பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும், தீபங்கர் கோப் மீட்கப்படவில்லை.
அவர் தற்போது BGB மற்றும் பங்களாதேஷ் காவல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வீடியோ
சமூக வலைதளத்தில் வெளியான வீடியோ
இதற்கிடையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ ஒன்றில், இந்தியாவில் கைது செய்யப்பட்ட பங்களாதேஷ் நபரை விடுவித்தால் மட்டுமே தீபங்கர் விடுவிக்கப்படுவார் என அக்கூட்டத்தினர் தெரிவிப்பது போல் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
விவசாயியை பாதுகாப்பாக மீட்க BSF அதிகாரிகள் தொடர்ந்து பங்களாதேஷ் அதிகாரிகளுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.