ஒவ்வொரு இந்தியரையும் காப்பதே இலக்கு! ஈரான் போர்க்களத்திலிருந்து தப்பிய 67,000 பேர்; மாநிலங்களவையில் அமைச்சர் ஜெய்சங்கர் தகவல்
செய்தி முன்னோட்டம்
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவி வரும் போர் பதற்றங்கள் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் இன்று (மார்ச் 9) மாநிலங்களவையில் விரிவான விளக்கமளித்தார். பிப்ரவரி 28 அன்று ஈரானின் உச்ச தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து தொடங்கிய இந்தப் போர், இந்தியாவிற்குப் பெரும் கவலையளிக்கும் விஷயமாக உருவெடுத்துள்ளதாக அவர் தெரிவித்தார். சுமார் ஒரு கோடி இந்தியர்கள் வளைகுடா நாடுகளில் வசிப்பதாலும், இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு இந்த பிராந்தியத்தைச் சார்ந்து இருப்பதாலும் இந்தியா நிலைமையை உன்னிப்பாகக் கவனித்து வருவதாக கூறினார்.
மீட்பு
67,000 இந்தியர்கள் மீட்பு
போர் பாதிப்புள்ள பகுதிகளிலிருந்து இந்தியர்களை வெளியேற்றும் பணிகள் குறித்து அமைச்சர் வழங்கிய முக்கியத் தகவல்கள். இதுவரை சுமார் 67,000 இந்தியர்கள் பாதுகாப்பாக எல்லைகளைக் கடந்து தாயகம் திரும்பியுள்ளனர். ஈரான் மற்றும் இதர வளைகுடா நாடுகளில் உள்ள இந்தியத் தூதரகங்கள் 24 மணி நேரமும் (24/7) செயல்பட்டு வருகின்றன. டெஹ்ரானில் உள்ள இந்திய மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர். வணிக ரீதியாகச் சென்றவர்கள் ஆர்மீனியா வழியாக வெளியேறத் தூதரகம் உதவி வருகிறது.
இரங்கல்
உயிரிழப்புகளுக்கு இரங்கல்
போர்க்களத்தில் நிகழ்ந்த சோகமான சம்பவங்கள் குறித்தும் அமைச்சர் பேசினார். கடல்சார் வணிகக் கப்பல்கள் மீதான தாக்குதலில் இரண்டு இந்திய மாலுமிகள் உயிரிழந்துள்ளனர் மற்றும் ஒருவர் மாயமாகியுள்ளார். இவர்களின் மறைவிற்கு ஒட்டுமொத்த அவையின் சார்பாக அவர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டார்.
நிலைப்பாடு
இந்தியாவின் தூதரக நிலைப்பாடு
போரைத் தவிர்க்கவும், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஈரானின் லவன் என்ற போர்க்கப்பல் கொச்சித் துறைமுகத்தில் தங்குவதற்கு இந்தியா அனுமதி வழங்கியது. இதற்கு ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு, நிலைமையை உடனுக்குடன் கண்காணித்து வருவதாகவும், இந்தியர்களின் பாதுகாப்பிற்கு எவ்விதக் குறையும் ஏற்படாது என்று அமைச்சர் கூறினார்.
பொருளாதாரத் தாக்கம்
பொருளாதாரத் தாக்கம் மற்றும் எரிசக்திப் பாதுகாப்பு
இந்த மோதல் உலகளாவிய விநியோகச் சங்கிலியைப் பாதிப்பதோடு, எரிசக்தி பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாக உள்ளது. கடற்படையினர் மற்றும் மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யக் கப்பல் போக்குவரத்து இயக்குநரகம் தொடர்ந்து எச்சரிக்கைகளை விடுத்து வருவதாக அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டார்.