Loading...
வங்கதேச உறவு இருதரப்பு நலனை சார்ந்திருக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அதிரடி
வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்

வங்கதேச உறவு இருதரப்பு நலனை சார்ந்திருக்க வேண்டும்: வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அதிரடி

எழுதியவர் Sekar Chinnappan
Aug 23, 2026
11:37 am

செய்தி முன்னோட்டம்

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவைத் திரும்ப ஒப்படைக்கக் கோரும் விவகாரம் இரு நாடுகளுக்கு இடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அண்டை நாடுகள் எப்போதுமே தங்களுக்கு சாதகமாக மட்டுமே செயல்படும் என எதிர்பார்க்க முடியாது என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். புதுடெல்லியில் நடைபெற்ற ஈகனாமிக் டைம்ஸ் உலகத் தலைவர்கள் உச்சிமாநாட்டில் பங்கேற்றுப் பேசிய அவர், எந்தவொரு ராஜதந்திர உறவும் இரு நாடுகளின் பரஸ்பர நலன்களையும் மதிப்பதாக அமைந்தால் மட்டுமே அது வெற்றிகரமாக இயங்க முடியும் என்பதை சுட்டிக்காட்டினார்.

அண்டை நாடுகள்

அண்டை நாடுகளின் நலன்களை இந்தியா மதித்துப் நடக்கிறது

நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசிய ஜெய்சங்கர், "ஒரு இருதரப்பு உறவு சுமூகமாக செயல்பட வேண்டும் என்றால், அது இரண்டு தரப்பின் பரஸ்பர நலன்களுக்கும் மதிப்பளிப்பதாக இருக்க வேண்டும்.

எனது அண்டை நாடுகள் எனது நலனுக்காக மட்டுமே செயல்பட வேண்டும் என நான் எதிர்பார்க்கவில்லை.

அதேபோல் அவர்களின் நலன் என்ன என்பதை உணர்ந்து அதற்குத் தகுந்த மரியாதையை அளிக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவிற்கும் உள்ளது." எனக் கூறினார்.

இரு நாடுகளுக்கு இடையேயான பொதுவான உடன்பாடு எட்டப்படும் புள்ளியிலேயே வெளியுறவு உறவுகள் சீராக இயங்கும் என்றும் அவர் விளக்கமளித்தார்.

உறவில் விரிசல்

ஷேக் ஹசீனா வெளியேற்றமும் இந்திய-வங்கதேச உறவில் விரிசலும்

கடந்த 2024 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாணவர் போராட்டத்தைத் தொடர்ந்து, வங்கதேசத்தின் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவில் தஞ்சம் புகுந்தார்.

முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் கீழ், ஹசீனாவை வங்காளதேசத்திடம் ஒப்படைக்க வேண்டும் என அந்நாடு தொடர்ந்து வலியுறுத்தி வந்ததால் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டது.

தற்பொழுது வங்கதேச தேசியவாதக் கட்சி தாரிக் ரஹ்மான் தலைமையில் ஆட்சி அமைத்துள்ளதைத் தொடர்ந்து, இருதரப்பு உறவுகளை மீண்டும் சீரமைக்கும் முயற்சிகளில் இந்தியா தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

ADVERTISEMENT

இந்திய வருகை

தாரிக் ரஹ்மான் இந்திய வருகையும் தூதரக முயற்சிகளும்

வங்கதேசப் பிரதமர் தாரிக் ரஹ்மான் விரைவில் இந்தியாவிற்கு அரசுமுறைப் பயணம் மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படும் சூழலில் ஜெய்சங்கரின் இந்தப் பேச்சு வெளியுறவுத் துறையில் முக்கியத்துவம் பெறுகிறது.

இரு நாடுகளுக்கும் இடையே சில கருத்து வேறுபாடுகள் நிலவியபோதிலும், இருதரப்பு உறவுகளை அடுத்தகட்டத்திற்கு எடுத்து செல்ல தாரிக் ரஹ்மானின் இந்திய வருகை மிக விரைவில் நடைபெறும் என்று வங்கதேசத்திற்கான இந்திய உயர் ஆணையர் தினேஷ் திரிவேதி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான ராஜாங்கப் பேச்சுவார்த்தைகள் மீண்டும் சூடுபிடித்துள்ளன.

ADVERTISEMENT