ஜம்மு காஷ்மீரின் பயங்கரவாத சதி வழக்கு: 12 இடங்களில் NIA சோதனை
2022ல் பதிவு செய்யப்பட்ட பயங்கரவாத சதி வழக்கு தொடர்பாக, தேசிய புலனாய்வு அமைப்பு(NIA) இன்று(மே-2) ஜம்மு காஷ்மீரின் பல்வேறு மாவட்டங்களில் உள்ள 12 இடங்களில் சோதனை நடத்தியது. NIA குழுக்கள், மத்திய ரிசர்வ் போலீஸ் படை(CRPF) மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் இணைந்து, அவந்திபோரா, புல்வாமா, அனந்த்நாக், ஸ்ரீநகர், ஜம்மு, பூஞ்ச் ஆகிய மாவட்டங்களில் சோதனைகளை நடத்தினர் என்று கூறப்படுகிறது. ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் கடந்த வாரம் தீவிரவாத தாக்குதல் நடந்தது. இதனால், ஐந்து வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்நிலையில், NIA இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. புல்வாமாவின் வஹிபோராவில் உள்ள முகமது யூசுப் வானி மற்றும் பிஜ்பெஹாராவின் சந்த்போரா கனெல்வானில் உள்ள ஃபயாஸ் அகமது சோஃபி ஆகியோரின் வீடுகளில் NIA சோதனை நடத்தியது.
பயங்கரவாதத்தை பரப்புவதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவல்
நடந்த சோதனைகளை அடுத்து, பூஞ்ச் பகுதியில் ஒரு பெண் தடுத்து வைக்கப்பட்டுள்ளார். மேலும், பல மொபைல் போன்கள் மற்றும் சிம் கார்டுகள் கைப்பற்றப்பட்டது என்று டைம்ஸ் நவ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்கு முன்னதாக, பூஞ்ச்-ரஜோரி பகுதியைச் சேர்ந்த குஜ்ஜார் நபரும் அவரது கூட்டாளியும் பயங்கரவாதிகளுக்கு உதவியதாகக் கூறி கைது செய்யப்பட்டனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், பயங்கரவாத சதி வழக்கு தொடர்பாக குல்காம், புல்வாமா, அனந்த்நாக், சோபூர் மற்றும் ஜம்மு மாவட்டங்களில் NIA சோதனை நடத்தியது. தடைசெய்யப்பட்ட பல பயங்கரவாத குழுக்களின் பணியாளர்கள், அப்பகுதிகளில் பயங்கரவாதத்தை பரப்புவதற்கு நாசகார சதித்திட்டங்களை தீட்டுவதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.