திருச்சி கிழக்கை ராஜினாமா செய்கிறாரா விஜய்? இடைத்தேர்தலில் களம் காணும் வேட்பாளர்கள் யார்?
செய்தி முன்னோட்டம்
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2026-ன் முடிவுகள் ஒரு வரலாற்று மாற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், முதலமைச்சராகப் பதவியேற்க உள்ள விஜய் தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியில் ஒரு முக்கிய முடிவை எடுக்க உள்ளார். நடந்து முடிந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்ற விஜய், நிர்வாக வசதிக்காக திருச்சி கிழக்கு தொகுதியிலிருந்து ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு நடைபெறவிருக்கும் இடைத்தேர்தலில், ஊழலுக்கு எதிராகப் போராடி வரும் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் அவர்களைத் தவெக வேட்பாளராக நிறுத்த ஆலோசனை நடைபெற்று வருகிறது. இது தவிர, லால்குடியில் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அல்லது அவரது மகன் பெயரும் பரிசீலனையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
நிர்வாக வசதி
ஏன் திருச்சி கிழக்கு ராஜினாமா?
திருச்சி கிழக்கு தொகுதி மக்கள் தங்களின் தொகுதியை விஜய் ராஜினாமா செய்யக்கூடாது எனக் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும், அரசியல் ரீதியாகப் பின்வரும் காரணங்களால் விஜய் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைக்கக்கூடும் எனக் கூறப்படுகிறது. திருச்சி கிழக்கை விட சென்னை பெரம்பூர் தொகுதியில் விஜய் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். முதல் தேர்தலிலேயே சென்னை மாவட்டத்தில் தவெக வேட்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்றுள்ளனர். முதல்வராகப் பதவி ஏற்ற பிறகு, மக்களை எளிதாகச் சந்திப்பதற்கும் நிர்வாக ரீதியாகவும் பெரம்பூரே சாதகமாக இருக்கும் என விஜய் கருதுகிறார்.
இடைத்தேர்தல் வேட்பாளர்
ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம்?
விஜய் திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தால், அங்கு 6 மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஆட்சி அமைக்கத் தனிப்பெரும்பான்மை தேவைப்படுவதால் உடனடியாக இடைத்தேர்தல் நடத்த வேண்டிய நெருக்கடியில் தவெக உள்ளது. இந்நிலையில், அந்தத் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளர்கள் குறித்துப் பல பெயர்கள் அடிபடுகின்றன. நேர்மையான அதிகாரி எனப் பெயரெடுத்த சகாயம் ஐ.ஏ.எஸ்-ஐ நிறுத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. லால்குடி தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன் அல்லது அவரது மகன் சிரஞ்சீவி ஆகியோரில் ஒருவரை நிறுத்தவும் வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. தமிழக அரசியலில் ஆட்சி அமைப்பதற்கான அடுத்தகட்ட நகர்வுகள் விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில், திருச்சி கிழக்கு தொகுதியின் இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.