Loading...
தமிழ்நாட்டில் மீண்டும் பரவுகிறதா கோவிட்-19? தமிழக அரசு கூறுவது என்ன?
தற்போதைய கள நிலவரத்தை தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது

தமிழ்நாட்டில் மீண்டும் பரவுகிறதா கோவிட்-19? தமிழக அரசு கூறுவது என்ன?

எழுதியவர் Venkatalakshmi V
Jul 14, 2026
11:38 am

செய்தி முன்னோட்டம்

தமிழ்நாட்டில் மீண்டும் கோவிட்-19 வைரஸ் தீவிரமாக பரவி வருவதாக சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகி வரும் நிலையில், அதுகுறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தில் அண்மையில் இருவர் கொரோனா தொற்றால் உயிரிழந்ததாக வெளியான செய்திகளுக்கு பின்னணியில் உள்ள மருத்துவ காரணங்களையும், தற்போதைய கள நிலவரத்தையும் தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.

விளக்கம்

ஆந்திரா நோயாளிகளின் மரணம்: மருத்துவ விளக்கம்

வேலூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இருவரின் இறப்பு குறித்து தற்போது சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது.

அதன்படி, இறந்த நபரின் ஒருவருக்கு(52 வயது) கடுமையான நிமோனியா பாக்டீரியா தொற்று மற்றும் கோவிட்-19 தொற்று இரண்டும் இருந்தன.

அத்துடன், நீரிழிவு மற்றும் நீண்டகால சிறுநீரக நோய்களும் இருந்தன. தொற்றால் ஏற்பட்ட தீவிர சுவாசக் கோளாறு காரணமாகவே இவர் ஜூன் 28 அன்று உயிரிழந்தார்.

இரண்டாம் நபருக்கு 68 வயது. இவர் பெருங்குடல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். புற்றுநோய் பாதிப்பின் இறுதி கட்டத்தில் ஏற்பட்ட சுவாசச் செயலிழப்பால் இவர் உயிரிழந்தார். இவருக்கு எடுக்கப்பட்ட பரிசோதனையில் கோவிட் தொற்று இருந்தது ஒரு தற்செயலான கண்டறிதல் மட்டுமே என அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

பாதிப்பு நிலவரம்

தமிழ்நாட்டில் தற்போதைய கோவிட் பாதிப்பு நிலவரம்

தமிழ்நாட்டில் ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு திட்டத்தின் கீழ், வழக்கமான கோவிட் கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

அறுவை சிகிச்சைக்கு முன்னதாக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகள் மற்றும் தீவிர சுவாசக் கோளாறு உள்ளவர்களுக்கு நடத்தப்படும் பரிசோதனைகளின் அடிப்படையில் பதிவான தரவுகளின் படி,

2024 ஆம் ஆண்டு: 990 நபர்கள் பாதிக்கப்பட்டனர்.

2025 ஆம் ஆண்டு: 1,250 நபர்கள் மற்றும் 2026 ஆம் ஆண்டு (தற்போது வரை): 335 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

"இந்த பாதிப்புகள் அனைத்தும் வழக்கமான மருத்துவக் கண்காணிப்பின் போது கண்டறியப்பட்டவை மட்டுமே; புதிய நோய்த் தொற்று பரவல் காரணமாக ஏற்பட்டவை அல்ல. கடந்த ஆண்டுகளை விட தற்போது கோவிட் தொற்று தமிழ்நாட்டில் மிகவும் குறைவாகவே உள்ளது" எனவும் சுகாதாரத்துறை அறிக்கை கூறியது.

ADVERTISEMENT

முன்னெச்சரிக்கைகள்

பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய முன்னெச்சரிக்கைகள்

முதியவர்கள், கர்ப்பிணிகள், சர்க்கரை நோய், சிறுநீரகக் கோளாறு போன்ற இணைநோய்கள் உள்ளவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

காய்ச்சல், இருமல், தொண்டை வலி அல்லது சுவாசக் கோளாறு போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத்துவமனையை அணுக வேண்டும்.

கைகளை சுத்தமாக வைத்துக் கொள்ளுதல், இருமல் மற்றும் தும்மலின் போது முகத்தை மூடிக்கொள்ளுதல் போன்ற பொது சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

தற்போது தமிழ்நாட்டில் அதிக வீரியம் கொண்ட கோவிட் வைரஸ் பரவுவதாக எந்த ஆதாரமும் இல்லை என்பதால், பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT