
காலிஸ்தான் பயங்கரவாதியைக் கொல்ல அடியாளை நியமித்தாரா இந்திய அதிகாரி? இந்தியா பதில்
செய்தி முன்னோட்டம்
அமெரிக்காவை தளமாகக் கொண்ட காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனைக் கொல்ல இந்திய உளவுத்துறை அதிகாரி ஒருவர் அடியாளை நியமித்ததாக தி வாஷிங்டன் போஸ்ட் கூறியுள்ள குற்றச்சாட்டுகளை இந்தியா நிராகரித்துள்ளது.
பன்னூனைக் கொல்லும் நடவடிக்கைக்கு அப்போதைய இந்திய உளவு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வுப் பிரிவின்(RAW) தலைவர் சமந்த் கோயல் ஒப்புதல் அளித்ததாக அமெரிக்க உளவுத்துறை அமைப்புகள் மதிப்பிட்டுள்ளன, என்று தி வாஷிங்டன் போஸ்ட் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது.
இந்நிலையில், இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
"அந்த செய்தியானது தீவிரமான விஷயத்தில் தேவையற்ற மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்தியா
"ஊகங்கள் மற்றும் பொறுப்பற்ற கருத்துகள் பயனுள்ளதாக இல்லை
"குற்றவாளிகள், பயங்கரவாதிகளின் நெட்வொர்க்குகள் குறித்து அமெரிக்க அரசாங்கம் தெரிவித்திருக்கும் பாதுகாப்பு கவலைகள் குறித்து ஆராய இந்திய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவின் விசாரணை நடந்து வருகிறது" என்று ஜெய்ஸ்வால் கூறினார்.
"இது பற்றிய ஊகங்கள் மற்றும் பொறுப்பற்ற கருத்துகள் பயனுள்ளதாக இல்லை," என்று அவர் தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதிகள் வேறு நாடுகளுக்குத் தப்பிச் சென்றாலும் அவர்களைத் துரத்துவோம் என்று சமீப காலமாக இந்தியா குறிப்பிட்டு வருகிறது.
பாகிஸ்தானில் தீவிரவாத செயல்களில் ஈடுபட முயன்றுவிட்டு, எல்லையில் இருந்து தப்பியோடி வருபவர்களை சுட்டுக்கொல்லும் வகையில் பாகிஸ்தானுக்குள் இந்தியா நுழையும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
அதனால், இந்தியா மீதான குற்றச்சாட்டுகளும் அதிகரித்துள்ளன.