ஈரான் அதிபரின் உயிரிழப்பை அடுத்து நாளை துக்க நாளாக அனுசரிக்கப்படும் என அறிவித்தது இந்தியா
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் நேற்று ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த நிலையில், நாளை இந்தியாவில் துக்க நாள் அனுசரிக்கப்படும் என்று இந்திய அரசாங்கம் அறிவித்தது. எனவே, நாளை, இந்தியா முழுவதும் அனைத்து கட்டிடங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். மேலும் நாளைய தினம் அதிகாரப்பூர்வ பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் எதுவும் நடைபெறாது. இது குறித்து ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட உள்துறை அமைச்சகம், "ஈரான் இஸ்லாமிய குடியரசின் தலைவர் டாக்டர் செயத் இப்ராஹிம் ரைசி மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசின் வெளியுறவு அமைச்சர் ஹெச்.இ. ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் ஆகியோர் ஹெலிகாப்டர் விபத்தில் காலமானார்கள்." என்று கூறியுள்ளது.
நாடு முழுவதும் ஒரு நாள் அரசு துக்கம் அறிவிப்பு
"இறந்த ஆன்மாக்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில், இந்திய அரசு மே 21, 2024 அன்று(செவ்வாய்கிழமை) நாடு முழுவதும் ஒரு நாள் அரசு துக்கத்தை அறிவித்துள்ளது." என்றும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது. "துக்க நாளில், தேசியக் கொடி தவறாமல் பறக்கவிடப்படும். எனினும், அனைத்து கட்டிடங்களிலும் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். மேலும் அன்றைய தினம் உத்தியோகபூர்வ பொழுதுபோக்கு நிகழிச்சி எதுவும் இருக்காது" என்று உள்துறை அமைச்சகம் தனது அறிக்கையில் கூறியுள்ளது. நேற்று இரவு முழுவதும் மீட்புப் பணிகள் நடந்த நிலையில், ஈரான் அதிபரின் ஹெலிகாப்டர் எரிந்த சிதைவுகள் இன்று காலை கண்டுபிடிக்கப்பட்டன. நேற்று மாலை அப்பகுதியில் பெய்த கனமழை மற்றும் பனிமூட்டம் காரணமாக மீட்புக் குழுவினரால் விபத்து நடந்த இடத்தை அடைய முடியவில்லை