LOADING...
ஐஎன்எஸ்வி கவுண்டின்யா: இந்தியாவின் பண்டைய கடல்வழிப் பயணத்தை மீட்கும் வரலாற்றுப் பயணம்
பண்டைய கடல்வழிப் பயணத்தை மீட்கும் ஐஎன்எஸ்வி கவுண்டின்யாவின் வரலாற்றுப் பயணம்

ஐஎன்எஸ்வி கவுண்டின்யா: இந்தியாவின் பண்டைய கடல்வழிப் பயணத்தை மீட்கும் வரலாற்றுப் பயணம்

எழுதியவர் Sekar Chinnappan
Dec 29, 2025
02:43 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியக் கடற்படையின் புதுமையான 'தையல் கப்பல்' (Stitched Ship) என்று அழைக்கப்படும் ஐஎன்எஸ்வி கவுண்டின்யா, தனது முதல் சர்வதேசப் பயணத்தை ஞாயிற்றுக்கிழமை (டிசம்பர் 29) குஜராத்தின் போர்பந்தரிலிருந்து ஓமன் நாட்டின் மஸ்கட் நகருக்குத் தொடங்குகிறது. இந்தக் கப்பல் 5 ஆம் நூற்றாண்டின் பண்டைய இந்தியக் கப்பல் வடிவமைப்பை அடிப்படையாகக் கொண்டது. அஜந்தா குகை ஓவியங்களில் காணப்படும் கடல்வழிப் பயணக் கப்பல்களின் மாதிரியைக் கொண்டு, நவீன வரைபடங்கள் ஏதுமின்றி இந்தியக் கடற்படை மற்றும் கேரளக் கைவினைஞர்களால் இது மீளுருவாக்கம் செய்யப்பட்டுள்ளது.

தொழில்நுட்பம்

தையல் தொழில்நுட்பம்

இக்கப்பல் நவீனக் கப்பல்களைப் போல உலோக ஆணிகளால் இணைக்கப்படவில்லை. கட்டுமானம்: மரப்பலகைகள் தென்னை நார்க் கயிறுகளால் தைக்கப்பட்டு, மீன் எண்ணெய் மற்றும் மரப் பிசின்கள் மூலம் நீர் புகாதவாறு சீல் செய்யப்பட்டுள்ளன. பரிமாணங்கள்: சுமார் 19.6 மீட்டர் நீளமும், 6.5 மீட்டர் அகலமும் கொண்டது. இயக்கம்: இதில் நவீன இயந்திரங்கள் கிடையாது; சதுரப் பாய் மரங்கள் (Square sails) மற்றும் துடுப்புகள் மூலமே இயக்கப்படும்.

நோக்கம்

பயணத்தின் நோக்கம்

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்திய மாலுமிகள் ஆப்பிரிக்கா, மேற்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவுக்கு மேற்கொண்ட கடல்வழிப் பாதைகளை அடையாளப்படுத்தும் வகையில் இந்தப் பயணம் அமைகிறது. 15 கடற்படை வீரர்கள் மற்றும் பொருளாதார நிபுணர் சஞ்சீவ் சன்யால் உட்பட 16 பேர் கொண்ட குழு இந்தப் பயணத்தை மேற்கொள்கிறது. இந்தக் கப்பலுக்குப் பண்டைய இந்திய மாலுமி கவுண்டின்யாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இவர் சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இருந்து தென்கிழக்கு ஆசியாவிற்குப் பயணம் செய்து, அங்கு பூனான் (தற்போதைய கம்போடியா) பேரரசை நிறுவிய பெருமைக்குரியவர்.

Advertisement

அடையாளம்

கலாச்சாரச் சின்னங்கள்

இக்கப்பலில் இந்தியாவின் பாரம்பரியத்தை உணர்த்தும் பல சின்னங்கள் உள்ளன: காண்ட பேருண்டா (Gandabherunda): கடம்ப வம்சத்தின் சின்னமான இருதலைப் பறவை பாய்மரத்தில் இடம்பெற்றுள்ளது. சிம்ம யாளி (Simha Yali): கப்பலின் முன்பகுதியில் செதுக்கப்பட்டுள்ளது. ஹரப்பா கால நங்கூரம்: சிந்து சமவெளி நாகரிக காலத்து பாணியிலான கல் நங்கூரம் இதில் பயன்படுத்தப்படுகிறது. மத்திய கலாச்சார அமைச்சகம் மற்றும் இந்தியக் கடற்படையின் கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கப்பல், இந்தியாவின் மறைந்துபோன கடல்சார் தொழில்நுட்பத்தை உலகிற்குப் பறைசாற்றும் ஒரு நடமாடும் அருங்காட்சியகமாகத் திகழ்கிறது.

Advertisement