Page Loader
இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் வகிர் என்ற புதிய 5வது நீர்மூழ்கி கப்பல் இணைப்பு

இந்திய கடற்படையில் ஐஎன்எஸ் வகிர் என்ற புதிய 5வது நீர்மூழ்கி கப்பல் இணைப்பு

எழுதியவர் Nivetha P
Jan 23, 2023
07:06 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கடற்படையில் தற்போது 150க்கும் மேற்பட்ட போர் கப்பல்கள் உள்ளன. அதன்படி, 2027ம் ஆண்டிற்குள் இந்த எண்ணிக்கையை 200ஆக உயர்த்த மத்திய பாதுகாப்பு துறை இலக்கு நிர்ணயித்துள்ளதாக தெரிகிறது. அதே போல், கடற்படையில் 17 நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளன என்று கூறப்படுகிறது. இதில் 2 நீர்மூழ்கி கப்பல்கள் அணு ஆயுத தாக்குதல் நடத்தும் திறன் கொண்டவை ஆகும். கடந்த 2005ம் ஆண்டு பிரான்சின் நேவல் க்ரூப் நிறுவனத்துடன் இணைந்து 6 புதிய நீர்மூழ்கி கப்பல்களை தயாரிக்க ஒப்பந்தம் செய்தது. அதன் படி, கடந்த 2007ம் ஆண்டு மும்பை கட்டுமான தளத்தில் நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கும் பணி துவங்கப்பட்டது. இதனையடுத்து, முதல் நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் கல்வாரி கப்பல் 2017ம்ஆண்டு இந்திய கடற்படையில் சேர்க்கப்பட்டது.

இன்று இணைக்கப்பட்டது

அதிநவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்ட ஐஎன்எஸ் வகிர்

அதனை தொடர்ந்து 2019ம் ஆண்டு ஐஎன்எஸ் காந்தேரி, 2021ம் ஆண்டு ஐஎன்எஸ் கரஞ்ச், ஐஎன்எஸ் வேலா ஆகியன அடுத்தடுத்து கடற்படையில் இணைக்கப்பட்டது. இந்த வரிசையில் தற்போது 5வது நீர்மூழ்கி கப்பலான ஐஎன்எஸ் வகிர் நீர்மூழ்கி கப்பல் இன்று(ஜன., 23) இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டுள்ளது. இந்த ஐஎன்எஸ் வகிர் கப்பலானது 67.5 மீட்டர் நீளமும், 6.2 மீட்டர் அகலமும் கொண்டது. இதில் எதிரி போர்க்கப்பல்களை அழிக்கும் அதிநவீன ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த கப்பல் கடலுக்கு அடியில் 350 மீட்டர் அடி ஆழம் வரை மூழ்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கிறது. மேலும் இந்த வகிர் கப்பலால் கடலுக்கு அடியில் சுமார் 2 வாரங்கள் வரை தங்கியிருக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.