காலாண்டு முடிவுகளை வெளியிட்டது இன்ஃபோசிஸ்!
டிசிஎஸ் நிறுவனத்தைத் தொடர்ந்து இன்ஃபோசிஸ் நிறுவனம், நேற்று தங்கள் நான்காம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. நேற்று பங்குச் சந்தை வர்த்தக நேர முடிவிற்கு பிறகு தங்கள் காலாண்டு முடிவுகளை அறிவித்தது இன்ஃபோசிஸ். ஆனால், நேற்று முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பாகவே, மும்பை பங்குச்சந்தையில் 2.8%, தேசிய பங்குசந்தையில் 3%-மும் சரிவைச் சந்தித்திருந்தன இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகள். காலாண்டின் முடிவில், ரூ.6,128 கோடி நிகர லாபம் ஈட்டியிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறது அந்நிறுவனம். இது அதற்கு முந்தைய காலாண்டை விட 16% குறைவு. எனினும், அதற்கு முந்தைய நிதியாண்டின் கடைசி காலாண்டை விட 6% அதிகம். அதேபோல அந்நிறுவனத்தின் வருவாயும், முந்தைய காலாண்டை விட 2.2% குறைவாகவும், முந்தைய நிதியாண்டின் கடைசி காலாண்டை விட 16% அதிகரித்தும் இருக்கிறது.
பங்குச்சந்தையில் எதிரொலிக்குமா?
லாபம் மற்றும் வருவாயைக் கடந்து, நான்காம் காலாண்டில் 3,611 பணியாளர்களையும் பணிநீக்கம் செய்திருக்கிறது, இன்ஃபோசிஸ் நிறுவனம். டிசிஎஸ் நிறுவனத்தைப் போல, இன்ஃபோசிஸ் நிறுவனமும், சந்தை எதிர்பார்ப்பை விட குறைவான லாபம் மற்றும் வருவாயையே பதிவு செய்திருக்கிறது. எனினும், முடிவுகளை வெளியிடுவதற்கு முன்பே அந்நிறுவனப் பங்குகள் சரிவைச் சந்தித்திருக்கின்றன. ஆனால், முதலீட்டாளர்களுக்கான நற்செய்தியாக கடந்த காலாண்டிற்கான டிவிடெண்ட் தொகையாக, ஒரு பங்குக்கு, ரூ.17.50-ஐ அறிவித்திருக்கிறது அந்நிறுவனம். ஏற்கனவே, கடந்த நிதியாண்டின் இடையில் ஒரு பங்குக்கு ரூ.16.50 டிவிடெண்டாக வழங்கியது குறிப்பிடத்தக்கது. திங்களன்று பங்குச்சந்தை தொடங்கும்போது, இதன் நான்காம் காலாண்டு முடிவுகள், அதன் பங்குகளில் என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்தும், என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.