அதிக பயணிகளை விமானத்தில் ஏற்றிய இண்டிகோ: சீட் இல்லாததால் பாதியிலேயே திரும்பியது விமானம்
மும்பையில் இருந்து வாரணாசி சென்ற இண்டிகோ விமானம், அதிக முன்பதிவு காரணமாக மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் சர்வதேச விமான நிலையத்திற்கு(சிஎஸ்எம்ஐஏ) திரும்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இன்று காலை 7:50 மணியளவில் 6E6543 என்ற விமானம் மும்பையில் இருந்து கிளம்பும் போது, விமானத்தின் பின்புறத்தில் ஒரு ஆண் பயணி நிற்பதை விமான பணியாளர்கள் கண்டதும் அதிக முன்பதிவுகள் நடைதிருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. "அப்போதுதான் விமான பணியாளர்கள் விமானியை எச்சரித்தனர். அதனையடுத்து அந்த விமானம் மீண்டும் முனையத்திற்குத் திரும்ப வேண்டியதாகிவிட்டது" என்று விமானத்தில் இருந்த பயணி சந்தீப் பாண்டே கூறியுள்ளார்.
விமானம் புறப்படுவதற்கு 1 மணிநேரம் தாமதம்
அதிக பயணிகள் முன்பதிவு செய்து விமானத்தில் ஏறியதால் விமானம் புறப்படுவதில் குறிப்பிடத்தக்க தாமதம் ஏற்பட்டது. "விமானம் விமான நிலையத்திற்கு திரும்பியது. கூடுதலாக இருந்த பயணி இறக்கிவிடப்பட்டார். அந்த விமானம் குறைந்தது ஒரு மணி நேரம் தாமதத்திற்குப் பிறகு புறப்பட்டது. புறப்படுவதற்கு முன் அந்த விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளின் கேபின் சாமான்களையும் விமான நிறுவனம் சரிபார்த்தது," என்று மற்றொரு பயணி அகிலேஷ் சௌபே கூறியுள்ளார். Flightradar24 என்ற விமான கண்காணிப்பு இணையதளத்தின் படி, அந்த விமானம் கடைசியில் 8:41 மணிக்கு புறப்பட்டது. அதன் பிறகு, காலை 10:30 மணியளவில் அந்த விமானம் வாரணாசியில் தரையிறங்கியது.