LOADING...
இன்று மட்டும் 600க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து; தொடரும் குளறுபடியால் பயணிகள் அவதி
இன்று மட்டும் 600க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து

இன்று மட்டும் 600க்கும் மேற்பட்ட இண்டிகோ விமானங்கள் ரத்து; தொடரும் குளறுபடியால் பயணிகள் அவதி

எழுதியவர் Sekar Chinnappan
Dec 06, 2025
12:20 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் மிகப்பெரிய உள்நாட்டு விமான நிறுவனமான இண்டிகோவில் நிலவும் நெருக்கடி சனிக்கிழமை (டிசம்பர் 6) நான்காவது நாளாக நீடித்தது. இதனால் சனிக்கிழமை மட்டும் நாடு முழுவதும் சுமார் 600 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை, ஹைதராபாத், அகமதாபாத் போன்ற முக்கிய விமான நிலையங்களின் சேவைகள் இதனால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

விவரங்கள்

விமான நிலையங்களில் ரத்து விவரங்கள்

இண்டிகோவின் இந்தச் செயல்பாட்டுப் பிரச்சனையால், ஹைதராபாத் விமான நிலையத்தில் மட்டும் மொத்தம் 69 விமானங்கள் (26 வருகை, 43 புறப்பாடு) ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னை விமான நிலையத்தில் மொத்தம் 48 விமானங்கள் ரத்தாகியுள்ளன. அகமதாபாத் விமான நிலையத்தில் 19 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. டெல்லி, மும்பை, கொல்கத்தா, பெங்களூரு போன்ற முக்கிய நகரங்களுக்கான பயணிகளும் தாமதங்கள் மற்றும் ரத்துகள் காரணமாகச் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

காரணம்

குழப்பத்திற்கான காரணம்

விமானிகள் பற்றாக்குறையே இந்தக் குழப்பத்திற்கான முக்கியக் காரணம் என்று இண்டிகோ தெரிவித்துள்ளது. புதிய விமானக் கடமை நேரக் கட்டுப்பாடு விதிகள் (FDTL) காரணமாக விமானிகள் மற்றும் பணியாளர்களின் வேலை நேரம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், விமானங்களை இயக்கத் தேவையான விமானிகளின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, பல விமானங்கள் கடைசி நிமிடத்தில் ரத்து செய்யப்படுகின்றன அல்லது மறு அட்டவணைப்படுத்தப்படுகின்றன. பயணிகள் இந்தச் சூழ்நிலையில், விமான நிலவரங்களை அடிக்கடி இண்டிகோ இணையதளம் அல்லது விமான நிலைய இணையதளங்களில் சரிபார்க்குமாறும், முழுப் பணத்தைத் திரும்பப் பெற அல்லது கட்டணமின்றி மறு முன்பதிவு செய்ய வாடிக்கையாளர் ஆதரவைத் தொடர்புகொள்ளுமாறும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Advertisement