இண்டிகோ நெருக்கடி: விமான கட்டணத்தை கட்டுப்படுத்த ஏர் இந்தியா புதிய கட்டணங்களை அறிவித்துள்ளது
செய்தி முன்னோட்டம்
நாடு முழுவதும் இண்டிகோ விமானங்களின் சேவை தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு, விமான கட்டணங்கள் திடீரென உயர்ந்துள்ள நிலையில், பயணிகளுக்கு ஏற்படும் நிதி சுமையை குறைக்கும் வகையில் ஏர் இந்தியா நிறுவனம் புதிய பயண கட்டணங்களை அமல்படுத்த தொடங்கியுள்ளது. சமீப நாட்களாக இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டதால், மற்ற விமான நிறுவனங்கள் அதிக விலைக்கு டிக்கெட் விற்பனை செய்வதாகப் புகார்கள் எழுந்தன. இதனையடுத்து, விமானக் கட்டணங்களை கண்காணித்து, உச்சவரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்று அனைத்து விமான நிறுவனங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டது. மத்திய அரசின் உத்தரவுக்கு இணங்க, ஏர் இந்தியா மற்றும் அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டும் புதிய கட்டணங்களை அமல்படுத்தும் பணியைத் தொடங்கியுள்ளன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#ImportantUpdate
— Air India (@airindia) December 7, 2025
In compliance with the Ministry of Civil Aviation's (MoCA) directive issued on the evening of 6 December regarding the capping of Economy Class base fares, Air India Group commenced the rollout of the new prescribed fares across its reservation systems…
நிவாரணம்
பயணிகளுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் கட்டணங்கள் திரும்ப தரப்படும்
மாற்றுக் கட்டணங்கள் அமல்படுத்தப்படும் இந்த இடைப்பட்ட காலத்தில், நிர்ணயிக்கப்பட்ட உச்சவரம்பை விட அதிக விலைக்கு எகானமி வகுப்பில் டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளுக்கு, கூடுதலாக வசூலிக்கப்பட்ட தொகை திரும்பப் பெறப்படும் என்றும் ஏர் இந்தியா அறிவித்துள்ளது. விலை நிர்ணயத்தில் ஒழுக்கத்தைப் பேணுவது, அவசரமாகப் பயணம் செய்ய வேண்டிய மூத்த குடிமக்கள், மாணவர்கள் மற்றும் நோயாளிகள் போன்றோர் நிதி சிரமத்திற்கு ஆளாகாமல் இருப்பதை உறுதிசெய்வது ஆகியவையே இந்த உத்தரவின் நோக்கம் என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதற்கிடையில், இண்டிகோ நிறுவனம் பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு இதுவரை ₹610 கோடிக்கும் அதிகமாகப் பணத்தைத் திரும்ப அளித்துள்ளது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.