சீன பொருட்களுக்கு 'நோ' சொல்லும் இந்தியர்கள்; ஏன் தெரியுமா?
இந்திய-சீன எல்லை பிரச்சனைகளுக்கு பிறகு நிறைய இந்தியர்கள் சீன பொருட்களை வாங்காமல் புறக்கணித்து வருவதாக லோக்கல் சர்க்கிள்ஸ் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 2020ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே எல்லைப் பிரச்சனைகள் காரணமாக ஒரு பனிப்போர் நிலவி வருகிறது. 2020ஆம் ஆண்டு தொடக்கத்தில் இரு நாடுகளின் இராணுவங்களும் லடாக் பகுதியில் மோதிக்கொண்டன. அதனை தொடர்ந்து, இந்திய-சீன எல்லைப் பகுதியில் பல மோதல்கள் நடந்தது. சமீபமாக, கடந்த வாரம் அருணாச்சல பிரதேசம் தவாங் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்த 400 சீன வீரர்களை இந்திய வீரர்கள் சண்டையிட்டு விரட்டி அடித்திருக்கின்றனர். இது போன்ற சம்பவங்களுக்கு பிறகு 10ல் 6 இந்தியர்கள் சீன பொருட்கள் வாங்குவதைத் தவிர்த்து வருவதாக இந்த ஆய்வு கூறுகிறது.
ஆய்வில் தெரியவந்துள்ள முக்கிய தகவல்கள்:
10ல் 6 இந்தியர்கள் சீன பொருட்கள் வாங்குவதைத் தவிர்த்து விடுகின்றனர். சீன பொருட்களுக்குப் பதிலாக 11 சதவீதம் பேர் தரமான இந்தியப் பொருட்களை வாங்குகின்றனர். 8 சதவீதம் பேர் இதற்கு பதிலாக வெளிநாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வாங்குகின்றனர். 2021, 2022ஆம் ஆண்டு சீன பைகள், ஆடைகள், உதிரிபாகங்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை 11 சதவீதமாக இருந்தது. அது இப்போது 3 சதவீதமாக குறைந்துள்ளது. ஆனால், 2021 ஆம் ஆண்டில் சீன பொருட்களுக்கான தேவை 29 சதவீதம் மட்டுமே இருந்தது. அது இப்போது 35 சதவீதமாக உயர்ந்துள்ளது. எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், பண்டிகை காலத் தேவை, எழுது பொருட்கள், சீன பொம்மைகள் போன்றவற்றிற்கு கிராக்கி அதிகமாகி இருக்கிறது.