கனடா நாட்டவர்களுக்கு 9 வகை விசாக்களை நிறுத்தி வைத்துள்ளது இந்தியா
கனடா நாட்டவர்களுக்கு 9 வகை விசாக்கள் வழங்குவதை, இந்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு நாடுகளுக்கு இடையே ஏற்பட்ட ராஜாங்க ரீதியான மோதலால், கடந்த செப்டம்பர் 21 ஆம் தேதி கனடா நாட்டவர்களுக்கு விசா வழங்குவதை இந்தியா நிறுத்தியது. இந்நிலையில் கடந்த வாரம் முதல், வணிகம், மருத்துவம், மாநாடு உள்ளிட்ட காரணங்களுக்காக இந்திய அரசு மீண்டும் கனடா நாட்டினருக்கு விசா வழங்க தொடங்கியது. இருப்பினும், பார்வையாளர்கள், வேலைவாய்ப்பு, மாணவர்கள், திரைப்பட படப்பிடிப்புகள், மிஷனரிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்ட 9 வகைகளில் விசாக்கள் வழங்குவதை இந்திய அரசு நிறுத்தியுள்ளது.
இந்தியா கனடா இடையே நீடிக்கும் பதற்றம்
காலிஸ்தான் ஆதரவாளர் நிஜார், கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு இந்திய அதிகாரிகளுக்கு தொடர்பு இருப்பதற்கு நம்பத்தகுந்த ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் பேசியது சர்ச்சையானது. இது சர்ச்சையான நிலையில், இருநாடுகளும் பரஸ்பரம் விசா வழங்குவதை நிறுத்தின. இச்சம்பவம் இரு நாடுகளின் உறவுகளிடையே விரிசலை ஏற்படுத்திய நிலையில், இந்தியா தூதர்கள் குறைப்பு நடவடிக்கையில் இறங்கியது. அதன்படி இந்தியாவில் உள்ள கனடா தூதர்களை, கனடாவில் உள்ள இந்திய தூதர்களின் அளவிற்கு குறைக்க உத்தரவிட்டது. அந்த உத்தரவை அடுத்து இந்தியாவில் இருந்து 41 கனடா தூதர்கள் கடந்த அக்டோபர் 20ஆம் தேதி வெளியேறினர். தற்போது இந்தியாவில் டெல்லியில் மட்டும் 21 கனடா தூதர்களும், கனடா ஒட்டாவாவில் 21 இந்திய தூதர்களும் உள்ளது குறிப்பிடத்தக்கது.