LOADING...
ஆகஸ்ட் முதல் மாறும் ரயில்வே டிக்கெட் சிஸ்டம்; கன்பார்ம் ஆகும் வாய்ப்பை துல்லியமாக கணிக்கும் AI வசதி
ஆகஸ்ட் முதல் மாறும் ரயில்வே டிக்கெட் சிஸ்டம்

ஆகஸ்ட் முதல் மாறும் ரயில்வே டிக்கெட் சிஸ்டம்; கன்பார்ம் ஆகும் வாய்ப்பை துல்லியமாக கணிக்கும் AI வசதி

எழுதியவர் Venkatalakshmi V
Jun 08, 2026
02:32 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய ரயில்வே தனது வரலாற்றிலேயே மிக முக்கியமான டிஜிட்டல் புரட்சியை நோக்கி நகர்ந்துள்ளது. கடந்த 1986-ஆம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருந்து வரும் சுமார் 40 ஆண்டுகள் பழமையான பயணிகள் முன்பதிவு அமைப்பை மாற்றிவிட்டு, புதிய அதிநவீன தொழில்நுட்பக் கட்டமைப்புக்கு ரயில்களை மாற்றும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. வருகிற ஆகஸ்ட் மாதம் முதல் இந்த புதிய முன்பதிவு முறை படிப்படியாக நாடு முழுவதும் அமலுக்கு வரவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் டெல்லி ரயில் பவனில் நடந்த உயர்மட்டக் கூட்டத்தில் ஆய்வு செய்தார். இந்த மாற்றத்தின் போது பயணிகளுக்கு எவ்வித ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு தடங்கலும் ஏற்படக்கூடாது என அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

காரணம்

ஏன் இந்த புதிய மாற்றம்?

2002-ல் இணைய வழி டிக்கெட் முறை அறிமுகமானதில் இருந்து தற்போது 88 சதவீதத்திற்கும் அதிகமான டிக்கெட்டுகள் ஆன்லைன் மூலமாகவே புக் செய்யப்படுகின்றன. பழைய தொழில்நுட்பத்தால் தட்கல் நேரங்களிலும், பண்டிகை காலங்களிலும் சர்வர் முடங்குவது மற்றும் கட்டணத் தோல்விகள் ஏற்படுகின்றன. புதிய சிஸ்டம் மிக அதிக அளவிலான இணையப் போக்குவரத்தை நொடியில் கையாளும் திறன் கொண்டது.

ரெயில்ஒன்

மக்களிடையே வேகம் எடுக்கும் 'RailOne' சூப்பர் ஆப்

இந்திய ரயில்வே கடந்த 2025 ஜூலை மாதம் அறிமுகப்படுத்திய 'ரெயில்ஒன்' மொபைல் செயலி, ஓராண்டு நிறைவடைவதற்குள் 3.5 கோடிக்கும் அதிகமான பதிவிறக்கங்களை கடந்து சாதனை படைத்துள்ளது. இந்த ஒரே ஒரு செயலியில் பயணிகள் பின்வரும் அனைத்து சேவைகளையும் பெற முடியும்: * முன்பதிவு செய்த டிக்கெட்டுகள், பொது டிக்கெட்டுகள் மற்றும் பிளாட்பார்ம் டிக்கெட்டுகளைப் புக் செய்தல். ரயிலின் தற்போதைய இருப்பிடம் மற்றும் எந்த பிளாட்பாரத்திற்கு ரயில் வரும் என்ற விபரம். ரயிலில் தங்களின் பெட்டி எங்கு வரும் என்பதை அறிவது. 'ரெயில் மதத்' மூலம் புகார்களைப் பதிவு செய்வது மற்றும் பயணத்தின் போதே உணவுகளை ஆர்டர் செய்வது.

Advertisement

AI வசதி

94% துல்லியமாக கணிக்கும் செயற்கை நுண்ணறிவு (AI) வசதி

புதிய முன்பதிவு மாற்றத்தின் மிக முக்கியமான அம்சம், வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் டிக்கெட்டுகள் கன்பார்ம் ஆகுமா, ஆகாதா என்பதைக் கணிக்கும் AI-அடிப்படையிலான கணிப்புத் கருவி ஆகும். முன்பு இந்த வசதியின் துல்லியம் 53 சதவீதமாக மட்டுமே இருந்தது. ஆனால், தற்போது மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இதன் துல்லியம் 94 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகள் தங்களின் பயணத் திட்டங்களை எவ்வித குழப்பமுமின்றி முன்கூட்டியே திட்டமிட முடியும். ஆகஸ்ட் மாதம் முதல் புதிய முன்பதிவு தளம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும்போது, கோடிக்கணக்கான இந்திய ரயில் பயணிகளுக்கு அதிவேகமான, பாதுகாப்பான மற்றும் ஸ்மார்ட்டான பயண அனுபவம் கிடைக்கும் என ரயில்வே வாரியம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Advertisement