Loading...
ரயில் பயணிகளுக்கு கவனத்திற்கு: இனி இரவு நேரங்களில் மொபைல் சார்ஜ் செய்யத் தடை விதித்துள்ளது ரயில்வே வாரியம்
இனி இரவு நேரங்களில் மொபைல் சார்ஜ் செய்யத் தடை விதித்துள்ளது ரயில்வே வாரியம்

ரயில் பயணிகளுக்கு கவனத்திற்கு: இனி இரவு நேரங்களில் மொபைல் சார்ஜ் செய்யத் தடை விதித்துள்ளது ரயில்வே வாரியம்

எழுதியவர் Venkatalakshmi V
Oct 28, 2026
12:12 pm

செய்தி முன்னோட்டம்

ரயில்களில் இரவில் ஏற்படும் தீ விபத்துகளை தடுக்கும் பொருட்டு, இரவு 11:00 மணி முதல் காலை 5:00 மணி வரை மொபைல் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்களை சார்ஜ் செய்வதற்கான வசதியை நிறுத்துமாறு அனைத்து ரயில்வே மண்டலங்களுக்கும் ரயில்வே வாரியம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சமீபத்தில் சவுத் ஈஸ்டர்ன் ரயில்வே மண்டலப்பிரிவின் கீழ் இயங்கிய ரயிலில் ஒருவர் சார்ஜ் போட்டிருந்த பவர் பேங்க் திடீரென வெடித்துச் சிதறியது. பவர் பேங்க் வெடித்ததால் ரயில் பெட்டி முழுவதும் அடர்ந்த புகை மூட்டம் ஏற்பட்டு பயணிகள் இடையே பெரும் பீதியை ஏற்படுத்தியது. இரவு நேரங்களில் மின் இணைப்பைத் துண்டிக்கும் நடைமுறை அமலில் இருந்தபோதிலும், ரயில்வே ஊழியர்கள் குறிப்பிட்ட நேரத்தில் சார்ஜிங் ஸ்விட்சுகளை அணைக்க தவறியதே இதற்கு காரணமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வழிகாட்டுதல்

திடீர் ஆய்வுகளும் கண்டிப்பான வழிகாட்டுதல்களும்

அக்டோபர் 26-ஆம் தேதியிட்ட கடிதத்தின் மூலம், ரயில்வே வாரியம் அனைத்து மண்டலங்களுக்கும் பின்வரும் உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரையிலான 6 மணி நேரக் கட்டுப்பாட்டில் எவ்வித விதிவிலக்கும் அளிக்கப்பட மாட்டாது.

ரயில்வே அதிகாரிகள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ரயில்களில் திடீர் ஆய்வு நடத்தி, சார்ஜிங் பாயிண்டுகள் சரியாக அணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

இரவு நேரப் பயணங்களைத் தொடங்குவதற்கு முன்பாகவே பயணிகள் தங்களது மொபைல் போன்களைச் சார்ஜ் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

சார்ஜிங் தடை

2014-ஆம் ஆண்டு விதி மீண்டும் அமல்

ரயில்களில் இரவு நேரச் சார்ஜிங் தடை என்பது புதிதாகக் கொண்டுவரப்பட்டது அல்ல.

கடந்த 2014-ஆம் ஆண்டு பெங்களூரு - ஹசூர் சாஹிப் நாந்தேட் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற்பட்ட தீ விபத்திற்குப் பிறகு, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் (CRS) அளித்த பரிந்துரையின் பேரில் இந்த விதி முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.

2021-ஆம் ஆண்டிலும் இந்த விதி மீண்டும் வலியுறுத்தப்பட்ட நிலையில், தற்போதைய சம்பவத்தைத் தொடர்ந்து பாதுகாப்பு விதியை எவ்வித அலட்சியமும் இன்றி அமல்படுத்த ரயில்வே வாரியம் உறுதியளித்துள்ளது.

ADVERTISEMENT