Loading...
ஸ்டீபன் ஹாக்கிங் வரிசையில் இந்திய இயற்பியலாளர்! சர்வதேச டிராக் பதக்கம் 2026 வென்று தீபக் தார் சாதனை
இந்தியப் பேராசிரியர் தீபக் தாருக்கு மதிப்புமிக்க டிராக் பதக்கம் 2026 வழங்கி கௌரவம்

ஸ்டீபன் ஹாக்கிங் வரிசையில் இந்திய இயற்பியலாளர்! சர்வதேச டிராக் பதக்கம் 2026 வென்று தீபக் தார் சாதனை

எழுதியவர் Sekar Chinnappan
Aug 10, 2026
10:28 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் புகழ்பெற்ற கோட்பாட்டு இயற்பியலாளரும், ஐஐஎன்எஸ்ஏ சிறப்புப் பேராசிரியருமான தீபக் தாருக்கு 2026 ஆம் ஆண்டிற்கான டிராக் பதக்கம் (Dirac Medal) வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. கோட்பாட்டு இயற்பியல் சர்வதேச மையத்தால் (ICTP) வழங்கப்படும் இந்த உயரிய விருது, இயற்பியல் துறையில் வழங்கப்படும் உலகளாவிய மிக உயரிய அங்கீகாரங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஸ்டீபன் ஹாக்கிங் போன்ற உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளர்கள் பெற்ற இந்த விருதை இம்முறை தீபக் தார் பெற்றுள்ளதால், சர்வதேச அறிவியல் அரங்கில் இந்தியாவின் பெருமை மேலும் உயர்ந்துள்ளது.

பங்களிப்பு

புள்ளிவிவர இயற்பியலில் ஆற்றிய மகத்தான பங்களிப்பு

பில்லியன் கணக்கிலான துகள்கள் கொண்ட அமைப்புகள் எவ்வாறு கூட்டாக செயல்படுகின்றன என்பதைப் பற்றி ஆராயும் புள்ளிவிவர இயற்பியல் (Statistical Mechanics) துறையில் ஆற்றிய சிறந்த ஆராய்ச்சிகளுக்காக தீபக் தாருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

இத்துறையின் கோட்பாடுகள் செயற்கை நுண்ணறிவு (ஏஐ), சிக்கலான நெட்வொர்க்குகள் மற்றும் நிதி சந்தைகளை தெளிவாக புரிந்துகொள்ள பெருமளவில் பயன்படுகின்றன.

பெங்களூருவில் உள்ள சர்வதேச கோட்பாட்டு அறிவியல் மையத்துடன் நீண்ட காலமாக இணைந்து பணியாற்றி வரும் தீபக் தார், சிக்கலான இயற்பியல் அமைப்புகள் தொடர்பான ஆராய்ச்சிகளில் பல தசாப்தங்களாக ஈடுபட்டு வருகிறார்.

இயற்பியல் துறைப் பயணம்

பிரதாப்கரில் இருந்து கால்டெக் வரையிலான நெகிழ்ச்சிப் பயணம்

உத்தரப் பிரதேசத்தின் பிரதாப்கர் என்ற சிறிய நகரில் 1951 இல் பிறந்த தீபக் தார், இந்தி வழிக் கல்வியில் பயின்றவர்.

அறிவியலின் மீது கொண்ட ஆர்வத்தால் அலகாபாத் பல்கலைக்கழகம் மற்றும் கான்பூர் ஐஐடியில் மேல்படிப்பு முடித்தார்.

பின்னர், அமெரிக்காவின் புகழ்பெற்ற கலிபோர்னியா தொழில்நுட்பக் கழகத்தில் ரிச்சர்ட் ஃபேய்ன்மேன் உதவித்தொகையுடன் முனைவர் பட்டம் பெற்றார்.

அங்கு புகழ்பெற்ற இயற்பியலாளர் ரிச்சர்ட் ஃபேய்ன்மேனின் உதவி ஆசிரியராகப் பணியாற்றும் அரிய வாய்ப்பையும் அவர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

அமெரிக்க வாய்ப்பு நிராகரிப்பு

அமெரிக்க வாய்ப்பை மறுத்து இந்திய அறிவியல் வளர்ச்சிக்கு சேவை

முனைவர் பட்டம் பெற்ற பிறகு அமெரிக்காவிலேயே தங்கிப் பணியாற்ற வாய்ப்புகள் இருந்தபோதிலும், தாய்நாடு திரும்பி இந்திய அறிவியலுக்கு சேவை செய்ய தீபக் தார் முடிவெடுத்தார்.

மும்பையில் உள்ள டாடா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் புனே ஐஐஎஸ்இஆர் நிறுவனத்தில் பேராசிரியராகப் பணியாற்றி நூற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கினார்.

மணல் குவியல் மாதிரிகள் (Sandpile models) தொடர்பான அவரது தாரின் எரிதல் அல்காரிதம் (Dhar's burning algorithm), சிக்கலான அமைப்புகள் பற்றிய ஆய்வில் உலகளவில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

ADVERTISEMENT

விருதுகள்

தேசிய மற்றும் சர்வதேச விருதுகளின் உச்சம்

தீபக் தாருக்கு ஏற்கனவே பல தேசிய மற்றும் சர்வதேச விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.

2022 ஆம் ஆண்டில் புள்ளிவிவர இயற்பியலின் மிக உயரிய விருதான போல்ட்ஸ்மேன் பதக்கம் (Boltzmann Medal) பெற்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார்.

மேலும், 2023 ஆம் ஆண்டில் இந்திய அரசு அவருக்கு நாட்டின் மூன்றாவது உயரிய விருதான பத்ம பூஷண் வழங்கி சிறப்பித்தது.

தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ள டிராக் பதக்கம், இந்தியாவில் இருந்துகொண்டே உலகத்தரம் வாய்ந்த சாதனைகளை செய்ய முடியும் என்பதற்கு மிகச்சிறந்த சான்றாக அமைந்துள்ளது.

ADVERTISEMENT