தமிழகத்தில் ரூ.54,000 கோடி முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்திருக்கும் இந்தியன் ஆயில்
அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் ரூ.54,000 கோடி மதிப்புடைய திட்டங்களில் முதலீடு செய்யவிருப்பதாக அறிவித்திருக்கிறது இந்தியன் ஆயில் நிறுவனம். அதில் ரூ.35,580 கோடி மதிப்பில் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் ஒன்றை அமைக்கவும் திட்டமிட்டிருக்கிறது இந்தியன் ஆயில் நிறுவனம். இதற்காக நாகப்பட்டினத்தில் 1,300 ஏக்கர் நிலப்பரப்பை தேர்வு செய்யவிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில், BS-6 வாகனங்களுக்கான பெட்ரோல் மற்றம் டீசல், கூடுதலாக பாலிப்ரொபிலினும் தயாரிக்கவிருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த அறிவிப்பு குறித்து செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது, "இந்தியாவில் தமிழகம் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் முக்கியமான சந்தையாக விளங்கி வருகிறது." எனத் தெரிவித்திருக்கிறார், இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலங்களுக்கான நிர்வாக இயக்குநர் வி.சி.அசோகன்.
தமிழகத்தில் வேறு என்ன திட்டங்களில் முதலீடு செய்கிறது இந்தியன் ஆயில்?
ஆசனூரில் ரூ.466 கோடி மதிப்பில் பெட்ரோல்/டீசல் முனையம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கும் நிலையில், வல்லூரில் ரூ.724 கோடி மதிப்பில் புதிய முனையம் ஒன்றையும், காமராஜர் துறைமுகத்தில் ரூ.921 கோடி மதிப்பில் எரிவாயு முனையும் ஒன்றையும் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது இந்தியன் ஆயில். மேலும், தமிழகத்தில் புதிய சில்லறை விற்பனை மையங்களை அமைக்கவும், ஏற்கனவே செயல்பாட்டில் இருக்கும் சில்லறை விற்பனை மையங்களை மேம்படுத்தவும், ரூ.2,500 கோடியை ஒதுக்கியிருக்கிறது அந்நிறுவனம். தமிழகத்தில் தற்போது 2,826 சில்லறை விற்பனை மையங்களை வைத்திருக்கும் நிலையில், புதிதாக தமிழகத்தில் 1,775 மையங்களையும், புதுச்சேரியில் 65 மையங்களையும் அமைக்கத் திட்டமிட்டிருக்கிறது இந்தியன் ஆயில். தற்போது தங்களது சில்லறை விற்பனை மையங்கள் மூலம் தமிழகத்தில் 10% எத்தனால் கலந்த எரிபொருளை விற்பனை செய்து வருகிறது அந்நிறுவனம்.