LOADING...
இந்திய கடற்படைக்கு மேலும் பலம்: நீர்மூழ்கிக் கப்பல்களை வேட்டையாடும் திறன் கொண்ட 'INS Mahe' சேர்க்கை
நீர்மூழ்கிக் கப்பல்களை வேட்டையாடும் திறன் கொண்ட 'INS Mahe'

இந்திய கடற்படைக்கு மேலும் பலம்: நீர்மூழ்கிக் கப்பல்களை வேட்டையாடும் திறன் கொண்ட 'INS Mahe' சேர்க்கை

எழுதியவர் Venkatalakshmi V
Nov 24, 2025
02:10 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய கடற்படையின் போர் வலிமையை அதிகரிக்கும் நோக்குடன், ஆழம் குறைந்த பகுதிகளில் நீர்மூழ்கிக் கப்பல்களை வேட்டையாடும் திறன் கொண்ட, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட INS Mahe என்ற போர்க்கப்பல் இன்று கடற்படையில் இணைக்கப்பட்டது. INS Mahe என்பது புதிய 'மாஹே வகுப்பு நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்புப் போர்க் கப்பல்களின்(Mahe-class Anti-Submarine Warfare Shallow Water Craft - ASW SWC)' தொடரில் முதன்மையானது ஆகும். இது மலபார் கடற்கரையில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'மாஹே' நகரின் பெயரால் அழைக்கப்படுகிறது. இந்தக் கப்பல் கொச்சின் கப்பல் கட்டும் தளத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கப்பலின் இலச்சினையில் (Crest) 'களரிப்பயட்டு' கலையின் நெகிழும் வாளான 'உருமி' இடம்பெற்றுள்ளது. இது இந்தக் கப்பலின் வேகத்தையும், துல்லியத்தையும், அபாரமான வலிமையையும் குறிக்கிறது.

ஆத்மநிர்பர் பாரத்

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட போர் கப்பல் 

இந்தக் கப்பலில் 80 சதவீதத்துக்கும் அதிகமான பொருள்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை ஆகும். இது 'ஆத்மநிர்பர் பாரத்' (தற்சார்பு இந்தியா) திட்டத்தின் கீழ் இந்தியாவின் போர்க்கப்பல் வடிவமைப்பு மற்றும் கட்டுமானத் திறனைக் காட்டுகிறது. இந்தப் போர்க்கப்பல், நீர்மூழ்கிக் கப்பல்களைத் தேடி வேட்டையாடுவது, கடலோரப் பகுதிகளில் ரோந்து செல்வது மற்றும் இந்தியாவின் முக்கியமான கடல்சார் வழித்தடங்களைப் பாதுகாப்பது போன்ற முக்கியப் பணிகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஐ.என்.எஸ். மாஹே, டார்ப்பிடோக்கள் (Torpedoes) மற்றும் நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட்டுகள் போன்ற சக்திவாய்ந்த ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்டது. மும்பையில் நடைபெற்ற இந்த இணைப்பு விழாவில், இந்திய ராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தலைமை விருந்தினராகக் கலந்துகொண்டார்.