உள்நாட்டிலேயே உருவான முதல் இந்திய கடற்படைக்கான நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல் டிசம்பர் 16இல் நாட்டிற்கு அர்ப்பணிப்பு
செய்தி முன்னோட்டம்
இந்திய கடற்படையின் தெற்கு கடற்படை கட்டளையின் கீழ் உள்நாட்டிலேயே வடிவமைத்து உருவாக்கப்பட்ட முதல் நீர்மூழ்கி ஆதரவுக் கப்பலான (Diving Support Craft) 'DSC A20' வரும் டிசம்பர் 16 அன்று கொச்சியில் முறைப்படி நாட்டிற்கு அர்ப்பணிக்கப்பட உள்ளது. தெற்கு கடற்படை கட்டளையின் பிளாக் ஆபிசர் கமாண்டிங்-இன்-சீஃப் வைஸ் அட்மிரல் சமீர் சாக்சேனா முன்னிலையில் இந்தக் கப்பல் சேவையில் இணைக்கப்படும். இது, கடற்படையின் நீர்மூழ்கி மற்றும் நீருக்கடியில் ஆதரவுத் திறனை மேம்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகும்.
தொழில்நுட்பம்
திறன் மற்றும் தொழில்நுட்பம்
'DSC A20' என்பது தொடர்ச்சியாக உருவாக்கப்படும் ஐந்து நீர்மூழ்கி ஆதரவுக் கப்பல்களில் முதலாவது ஆகும். இந்தக் கப்பல் குறிப்பாகக் கடலோரப் பகுதிகளில் பல்வேறு வகையான நீர்மூழ்கி மற்றும் நீருக்கடியில் உள்ள பணிகளுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இது, மிக உயர்ந்த பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டுத் திறனுக்கான மேம்பட்ட, அதிநவீன டைவிங் அமைப்புகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. இக்கப்பல் கேட்டமரான் ஹல் ஃபார்ம் அமைப்பைக் கொண்டுள்ளது. இதனால் இது சிறந்த நிலைத்தன்மை, அதிக தளப் பகுதி மற்றும் மேம்பட்ட கடல் பண்புகளை வழங்குகிறது. இதன் மொத்த எடை சுமார் 390 டன்கள் ஆகும். DSC A20 கப்பலானது இந்திய கப்பல் பதிவேட்டின் கடற்படை விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு இணங்க வடிவமைக்கப்பட்டும் கட்டப்பட்டும் உள்ளது.
மைல்கல்
சுயசார்பு இந்தியாவின் மைல்கல்
சிறந்த செயல்திறனை உறுதிப்படுத்த விசாகப்பட்டினத்தில் உள்ள கடற்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகத்தில் விரிவான பகுப்பாய்வு மற்றும் மாதிரி சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இந்த 'DSC A20' கப்பலின் அர்ப்பணிப்பு, இந்தியாவின் ஆத்மநிர்பர் பாரத் இலக்கை நோக்கிய பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லைக் குறிக்கிறது. இது, இந்திய கடற்படை, உள்நாட்டு கப்பல் கட்டுமானத் தொழில் மற்றும் தேசிய ஆராய்ச்சிக் கழகங்களுக்கு இடையே உள்ள தடையற்ற ஒத்துழைப்பிற்குச் சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. இக்கப்பல் சேவையில் இணைக்கப்படுவதன் மூலம், நீர்மூழ்கி ஆதரவு, நீருக்கடியில் ஆய்வு, மீட்பு உதவி மற்றும் கடலோர செயல்பாடுகளில் இந்திய கடற்படையின் திறன் கணிசமாக வலுப்படுத்தப்படும். இந்த DSC A20 கப்பல் கொச்சியில் நிலைநிறுத்தப்பட்டு தெற்கு கடற்படை கட்டளையின் கீழ் செயல்படும்.