தனது வெற்றிக்கான காரணத்தைப் பகிர்ந்து கொண்டிருக்கும் வேதாந்தா குழுமத் தலைவர் அனில் அகர்வால்
வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால், சமீபத்தில் லண்டனில் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு உரையாற்ற அழைக்கப்பட்டிருக்கிறார். வேதாந்தா குழுமத்தை இந்தியாவில் வெற்றிகரமாக வழிநடத்தி வந்திருக்கும் அவர், மாணவர்களிடம் தான் கடந்து வந்த பாதை குறித்தும், தன்னுடைய அனுபவங்களையும் பகிர்ந்திருக்கிறார். மாணவர்களுடனான சந்திப்புக்குப் பிறகு, கேம்பிரிட்ஜில் உரையாற்றிய அனுபவம் குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் அவர். தங்களுடைய 20-களில் இருந்து, அந்த மாணவர்களின் பேச்சும், பாவனையும் தன்னை உத்வேகப்படுத்தியதாகத் தெரிவித்திருக்கும் அவர், தான் அந்த வயதில் எப்படி இருந்தோம் என நினைவு கூர்ந்திருக்கிறார். "நான் அந்த வயதில் என்ன செய்வதென்றே தெரியாத, சரியான ஆங்கிலம் கூட பேச முடியாத, கல்லூரிப் படிப்பை பாதியில் நிறுத்திய ஒரு இளைஞனாக நின்றிருந்தேன்" எனக் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.
வெற்றிக்கான தாரக மந்திரமாக அனில் அகர்வால் குறிப்பிடுவது எது?
தன்னுடைய தொடக்கக் காலத்தில், 9 வணிக நிறுவனங்களை உருவாக்கி தோல்வியைடந்தை பிறகு, பல வருட மனஉளைச்சல் மற்றும் மனஅழுத்தத்தில் தவித்த பிறகே தன்னுடைய முதல் வெற்றிகரமான வணிக நிறுவனத்தை உருவாக்கியதாகக் குறிப்பிட்டிருக்கிறார் அவர். முக்கியமாக, தான் கற்றுக் கொள்வதை நிறுத்துவதே இல்லை எனப் பல இடங்களில் குறிப்பிட்டிருக்கிறார் அவர். முக்கியமாக இளம் தலைமுறையினரிடம் அதிகமாக கற்றுக் கொண்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார் அவர். "ஒரு நல்ல பட்டப் படிப்பு, குடும்ப பின்னணி, நல்ல ஆங்கிலப் புலமை எதுவுமே வெற்றிக்குத் தேவையில்லை. இவை எல்லாம் இருந்தால் நல்லது தான். ஆனால், இவை மட்டுமே வெற்றிக்கு அடிப்படையில்லை. நாம் கண்டிப்பாக வெற்றி பெறுவோம் என்ற பிடிவாத குணம் வேண்டும்" என தனது வெற்றிக்கான தாரக மந்திரத்தைக் குறிப்பிட்டிருக்கிறார் அவர்.