தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் 'இந்தியாவுக்காக பேசுகிறேன்' பாட்காஸ்ட் தொடரினால் ஏற்பட்ட சர்ச்சை
தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தனது பாட்காஸ்ட் தொடரின் முதல் எபிசோடில் பிரதமர் நரேந்திர மோடியைத் தாக்கி பேசியதற்கு பாரதிய ஜனதா கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இன்று காலை மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய நான்கு மொழிகளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 'இந்தியாவுக்காக பேசுகிறேன்' என்ற பாட்காஸ்ட் தொடரின் முதல் எபிசோட் வெளியானது. இந்த பாட்காஸ்ட் தொடரில் பேசிய மு.க.ஸ்டாலின், கடந்த ஒன்பது ஆண்டுகளாக மத்தியில் ஆட்சியில் இருந்த பாஜக சமூக நலன் தொடர்பான எந்த தேர்தல் வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டி இருந்தார்.
பாஜகவை கடுமையாக தாக்கி பேசிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்
வாக்குறுதியளித்தபடி அனைத்து குடிமக்களின் கணக்குகளிலும் தலா ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப்படவில்லை, விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாகவில்லை, ஆண்டுக்கு 2 கோடி வேலை வாய்ப்புகள் வழங்கப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டும் அவை நடக்கவில்லை என்று பாஜகவை கடுமையாக தாக்கி பேசி இருந்தார் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின். மேலும், இந்தியா முழுவதுமே மணிப்பூர் மற்றும் ஹரியானாவாக மாறுவதைத் தடுக்க INDIA கூட்டணி கட்சிகள் வெற்றி பெற வேண்டும் என்றும் ஸ்டாலின் கூறியிருந்தார். மணிப்பூர் மற்றும் ஹரியானா மாநிலங்களில் சமீபத்தில் பெரும் இனக்கலவரங்கள் நடந்தன. அந்த கல்வரங்களை தான் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு பேசி இருக்கிறார்.
மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியதாவது:
பன்முக கலாச்சாரம் மற்றும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை உருவாக்க இந்திய மக்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். பொதுத்துறை நிறுவனங்களை சிதைத்து நட்பு நிறுவனங்களிடம் ஒப்படைப்பது, ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாருக்கு விற்பது, விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை பாஜகவுக்கு நெருக்கமான நிறுவனங்களுக்கு விற்பது போன்ற பிரச்சினைகளை மறைக்க பாஜக வகுப்புவாதத்தை நாடுகிறது. 2002ல் குஜராத்தில் விதைக்கப்பட்ட வெறுப்பு தான் மணிப்பூரில் வகுப்புவாத மோதல்களையும் , ஹரியானாவில் மதவெறி வன்முறையையும் ஏற்படுத்தியது. இதை இப்போது நிறுத்தாவிட்டால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது. சமூக நல்லிணக்கம், கூட்டாட்சி, மதச்சார்பற்ற அரசியல் மற்றும் சோசலிசம் ஆகியவற்றை மீட்டெடுக்கவே INDIA கூட்டணி உருவாக்கப்பட்டது. மேலும், கூட்டாட்சி முறைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போதெல்லாம் திமுக முன்னணியில் நின்று போராடுகிறது. என்று கூறியுள்ளார்.
"இப்போதாவது மு.க.ஸ்டாலின் இந்தியாவை ஒரே நாடாக ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி": பாஜக
இந்நிலையில், மதம், சாதி மற்றும் மொழியின் அடிப்படையில் நாட்டை பிளவுபடுத்துவது திமுக தான் என்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது. கூட்டாட்சி முறையின் மீது பாஜக தாக்குதல் நடத்துவதாக கூறிய தமிழக முதல்வரின் குற்றசாட்டை முற்றிலுமாக மறுத்த தமிழக பாஜக துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி, தமிழகத்திற்கு வரி வருவாயில் உரிய பங்கை மத்திய அரசு வழங்கி வருவதாக கூறினார். மேலும், திமுகவை கிண்டல் செய்த அவர், "இப்போதாவது மு.க.ஸ்டாலின் இந்தியாவை ஒரே நாடாக ஏற்றுக்கொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்" என்றார்.
'இந்தியாவுக்காக பேசுகிறேன்' பாட்காஸ்ட் தொடரை பற்றி தெரிந்துகொள்ள வேண்டியவை
'இந்தியாவுக்காக பேசுகிறேன்' என்ற பாட்காஸ்ட், "பாஜக ஆட்சியின் கீழ் இந்தியாவின் அழிவு" என்ற கருத்தை முன்னிலை படுத்துவதற்காக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. எதிர்கட்சிக்கள் விரும்பும் சமத்துவ மற்றும் இணக்கமான இந்தியாவை உருவாக்க இந்த பாட்காஸ்ட் உதவும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மு.க.ஸ்டாலின் ஒரு பாட்காஸ்ட்டை தொடங்கி இருப்பது, அவரது அரசியல் தொடர்பு உத்தியில் ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது. தேசிய அரசியலில், குறிப்பாக INDIA கூட்டணியை வழிநடத்தி, வடிவமைப்பதில் இந்த பாட்காஸ்ட் பெரும் பங்கு வகிக்கும் என்று திமுக கருதுவாக கூறப்படுகிறது.