இஸ்ரேல் ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான ஐநா தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்தது இந்தியா
பாலஸ்தீனப் பகுதிகளை இஸ்ரேல் ஆக்கிரமிப்பதற்கு எதிரான ஐநா தீர்மானத்திற்கு இந்தியா உட்பட 145 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. நவம்பர் 9ஆம் தேதி, வியாழன் அன்று, இந்த வரைவு தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது. "கிழக்கு ஜெருசலேம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட சிரிய கோலான் உட்பட ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனிய பிரதேசத்தில் இஸ்ரேலிய குடியேற்றங்கள்" என்ற தலைப்பிலான ஐ.நா வரைவு தீர்மானம் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. கனடா, ஹங்கேரி, இஸ்ரேல், மார்ஷல் தீவுகள், மைக்ரோனேஷியா கூட்டாட்சி நாடுகள், நவுரு, அமெரிக்கா ஆகிய நாடுகள் இந்த தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தன.18 நாடுகள் வாக்களிக்காமல் இந்த தீர்மானத்தை புறக்கணித்தனர்.
போர்நிறுத்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ள மறுத்த இந்தியா
இந்நிலையில், ஐநா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி சாகேத் கோகலே, "இந்திய குடியரசு தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்" என்று கூறியுள்ளார். "பாலஸ்தீனத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்திருப்பது சட்டவிரோதமானது. இஸ்ரேலின் நிறவெறி இப்போது முடிவுக்கு வர வேண்டும்" என்று சாகேத் கோகலே மேலும் கூறியுள்ளார். கடந்த மாதம், இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் உடனடியாக மனிதாபிமான போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரி ஜோர்டான் ஒரு வரைவுத் தீர்மானத்தை ஐநா பொதுச் சபையில் சமர்ப்பித்திருந்தது. ஆனால், அந்த தீர்மானத்திற்கு வாக்களிக்க இந்தியா மறுத்துவிட்டது.