SCO உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் சீன, ரஷ்ய அதிபர்கள்
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று(ஜூலை 4) ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) உச்சி மாநாடு நடைபெற இருக்கிறது. இந்த மாநாட்டில் சீன அதிபர் ஜி ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோரும் பங்கேற்க இருக்கின்றனர். கடந்த மாதம் நடந்த வாக்னர் கூலிப்படையின் கிளர்ச்சிக்கு பிறகு ரஷ்ய அதிபர் கலந்து கொள்ள இருக்கும் முதல் சர்வதேச நிகழ்ச்சி இதுவாகும். பயங்கரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுப்பதால் உலகளவில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பாகிஸ்தானும் இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்க உள்ளது. பாகிஸ்தான் சார்பில் அந்நாட்டு பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் பங்கேற்க இருக்கிறார். பாகிஸ்தானும் சீனாவும் தானே முன்வந்து இந்த உச்சிமாநாட்டில் பங்கேற்க விருப்பம் தெரிவித்திருப்பது இந்த மாநாட்டின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.
இந்த SCO உச்சி மாநாட்டின் கருப்பொருள் SECURE என்பதாகும்
சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங், இந்த கூட்டத்தில் ஜின்பிங் முக்கிய கருத்துகளை தெரிவிப்பார் என்றும், மற்ற தலைவர்களுடன் சேர்ந்து, அமைப்பின் எதிர்கால வளர்ச்சிக்கான திட்டங்களை பட்டியலிடுவார் என்றும் கூறியுள்ளார். இந்த கூட்டத்தின் போது, ஆப்கானிஸ்தான், பயங்கரவாதம், பிராந்திய பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் டிஜிட்டல் உள்ளடக்கம் போன்ற தலைப்புகள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த SCO உச்சி மாநாட்டின் கருப்பொருள் SECURE என்பதாகும். அதாவது, S: பாதுகாப்பு, E: பொருளாதார மேம்பாடு, C: இணைப்பு, U: ஒற்றுமை, R: இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கான மரியாதை, E: சுற்றுச்சூழல் பாதுகாப்பு.