
சீனாவை விஞ்சியது; உலகின் சக்தி வாய்ந்த விமானப்படைகளில் இந்தியாவிற்கு மூன்றாவது இடம்
செய்தி முன்னோட்டம்
சமீபத்தில் வெளியிடப்பட்ட நவீன ராணுவ விமானங்களுக்கான உலக அடைவு (WDMMA) தரவரிசையின்படி, இந்தியா உலகிலேயே மூன்றாவது பெரிய வான்சக்தியாக உயர்ந்து, சீனாவை விஞ்சியுள்ளது. இந்த புதிய மதிப்பீடு, ஆசியாவின் மூலோபாய ராணுவ சமநிலையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை உணர்த்துவதுடன், அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு அடுத்த நிலையில் இந்தியாவை நிறுத்துகிறது. மொத்த விமானங்களின் எண்ணிக்கையில் இந்திய விமானப்படை ((1,716 விமானங்கள்) , சீன மக்கள் விடுதலை ராணுவ விமானப்படையை (3,733 விமானங்கள்) விட விமானங்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், WDMMA தரவரிசை ட்ரூவால் மதிப்பீட்டை (TVR) பயன்படுத்துகிறது. இந்த அளவுகோல், விமானங்களின் எண்ணிக்கை மட்டுமின்றி, செயல்பாட்டு பயிற்சி, தளவாட ஆதரவு, நவீனமயமாக்கல் மற்றும் தாக்குதல்/பாதுகாப்பு திறன்கள் போன்ற காரணிகளையும் கருத்தில் கொள்கிறது.
முதலிடம்
அமெரிக்கா முதலிடம்
இந்தியா 69.4 TVR மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இது சீனாவின் 63.8 TVR ஐ விட சற்று அதிகமாகும். அமெரிக்கா 242.9 TVR உடன் பட்டியலில் ஆதிக்கம் செலுத்துகிறது. பாதுகாப்பு ஆய்வாளர்கள், பிரெஞ்சு தயாரிப்பான ரஃபேல்கள், ரஷ்யாவின் சுகோய்-30கள் மற்றும் உள்நாட்டு தேஜாஸ் ஜெட் விமானங்கள் உள்ளிட்ட அதிநவீன மற்றும் சமச்சீரான இந்திய விமானப்படையின் கலவையை இந்தியாவின் இந்த வலுவான தரவரிசைக்கு காரணமாகக் கூறுகின்றனர். மேலும், ஆபரேஷன் சிந்தூர் போன்ற சூழல்களில், சீன இறக்குமதியை பெரிதும் நம்பியிருந்த பாகிஸ்தானின் வான் பாதுகாப்பு அமைப்புகளை விட இந்திய விமானப்படை சிறப்பாகச் செயல்பட்டது. இது இந்திய விமானப்படையின் உயர்ந்த செயல்பாட்டு திறனை வெளிப்படுத்தியது.
விமானங்கள்
கூடுதல் விமானங்களை சேர்க்க இந்தியா திட்டம்
வருங்காலத்தில், இந்தியா அடுத்த இரண்டு தசாப்தங்களில் 600 க்கும் மேற்பட்ட ஜெட் விமானங்களை, இலகுரக போர் விமானங்களின் வகைகளை படையில் சேர்க்கும் லட்சியத் திட்டங்களைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், உள்நாட்டு AMCA திட்டம் உருவாக்கப்படும் வரை, ரஷ்யாவின் சுகோய்-57 அல்லது அமெரிக்காவின் எப்-35 போன்ற ஐந்தாம் தலைமுறைப் போர் விமானங்களை இடைக்கால ஏற்பாடாக இறக்குமதி செய்வது குறித்தும் இந்தியா பரிசீலித்து வருவதை உறுதிப்படுத்தியுள்ளார். நவீனமயமாக்கலுக்கான இந்தக் கடுமையான அர்ப்பணிப்பு, உலக அரங்கில் இந்தியாவின் வளர்ந்து வரும் வான் மேலாதிக்கத்தை பலப்படுத்துகிறது. இதற்கிடையே, அண்டை நாடான பாகிஸ்தான் 46.3 TVR மதிப்பீட்டைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.