
உலகளவில் மீன்பிடித்தலில் இந்தியா இரண்டாவது இடம்: மத்திய அரசு தகவல்
செய்தி முன்னோட்டம்
உலக அளவில் அதிக அளவில் மீன் பிடிக்கும் நாடுகளில் இந்தியா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. உலக மீன் சந்தையில் இந்தியாவின் பங்களிப்பு தற்போது 8 சதவீதம் எனக் கூறப்பட்டுள்ளது. மத்திய மீன்வளத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2015ம் ஆண்டு முதல் இத்துறையில் 38,572 கோடி ரூபாய் முதலீட்டிற்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளதாகவும், இதன் விளைவாக நாட்டின் ஒட்டுமொத்த மீன் உற்பத்தி 195 லட்சம் டன்னாக உயர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சி
மீனவர்களுக்கு விநியோகத்தை அதிகப்படுத்த திட்டங்கள்
இந்த துறை ஆண்டுக்கு 8.74% வளர்ச்சி வேகத்தைப் பதிவு செய்து வருவதாகவும், தொடர்ச்சியான மேம்பாட்டிற்காக 34 மீன்வள மற்றும் பதப்படுத்தும் மையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அரசு தகவல் வெளியிட்டுள்ளது. மேலும், முக்கியமான மீன் வகைகளுக்கான விநியோக சங்கிலியை மேம்படுத்தும் பணியும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. மேலும், மீன்வள பாதுகாப்புக்காக மீனவர்கள் பயன்படுத்தும் படகுகளில் டிரான்ஸ்பாண்டர் கருவி இலவசமாக நிறுவப்பட்டுள்ளதையும், இதற்காக மீனவர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த கருவி மூலம், மீன்பிடி ஆலோசனைகள், வானிலை எச்சரிக்கைகள், பாதுகாப்பான பயண வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட பல தகவல்கள் நேரில் வழங்கப்படுகின்றன.