
கெஜ்ரிவால் கைதுக்கு எதிராக 'இண்டியா' கூட்டணி கட்சிகள் போராட்டம்: மத்திய டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது
செய்தி முன்னோட்டம்
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கைதுக்கு எதிராக 'இண்டியா' கூட்டணி கட்சிகள் சார்பில் இன்று நடைபெறும் போராட்டத்தையொட்டி, மத்திய டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மார்ச் 21 அன்று முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகம், டிடியு மார்க் மற்றும் ஐடிஓ ஆகிய பகுதிகள் பலத்த கண்காணிப்பில் உள்ளன.
பாஜக தலைமை அலுவலகம் செல்லும் சாலைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், மத்திய டெல்லியில் பல்வேறு இடங்களில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
டெல்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் கடந்த வாரம் வியாழக்கிழமை இரவு ED யால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால், ஒரு வாரம் அமலாக்க இயக்குனரகத்தின் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
டெல்லி
மாபெரும் பேரணியை நடத்த 'இண்டியா' கூட்டணி கட்சிகள் முடிவு
இதனையடுத்து, ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தது.
இந்நிலையில், இண்டியா கூட்டணி கட்சிகளும் தற்போது அந்த போராட்டங்களில் இறங்கி உள்ளன.
முக்கியமான பொது தேர்தலுக்கு முன், எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காக, பிரதமர் நரேந்திர மோடியின் அரசு விசாரணை நிறுவனங்களை பயன்படுத்துவதாக, எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டியுள்ளன.
கெஜ்ரிவாலின் கைது மற்றும் தேர்தல் பத்திரங்கள் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இண்டியா கூட்டணி கட்சிகள் வெள்ளிக்கிழமை பாஜக தலைமையகத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தும் என்று ஆம் ஆத்மி முன்பு அறிவித்திருந்தது.
இதற்கிடையில், டெல்லி மதுபான கொள்கை வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து மார்ச் 31ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் மெகா அணிவகுப்பை நடத்தப்போவதாக 'இண்டியா' கூட்டணி அறிவித்துள்ளது.