பங்களாதேஷ் வெள்ளத்திற்கு இந்தியா காரணமா? குற்றச்சாட்டை மறுக்கும் மத்திய வெளியுறவு அமைச்சகம்
பங்களாதேஷின் 8 மாவட்டங்களில் அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு இந்தியாவே காரணம் என்ற குற்றச்சாட்டை மத்திய வெளியுறவு அமைச்சகம் மறுத்துள்ளது. பங்களாதேஷில் உள்ள ஜகன்னாத் பல்கலைக்கழக மாணவர்கள் முன்வைத்த இந்த குற்றச்சாட்டுகளில், பங்காளதேஷிற்கு முன் அறிவிப்பு கொடுக்காமல் தும்பூர் மற்றும் கசல்டோபா அணைகளின் ஸ்லூஸ் கேட்களை இந்தியா திறந்ததன் விளைவாக வெள்ளம் ஏற்பட்டது என்று தெரிவித்திருந்தனர். இந்த கூற்றுக்கள் உண்மையில் தவறானவை என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. திரிபுரா மற்றும் பங்களாதேஷ் வழியாக பாயும் கும்டி ஆற்றில் உள்ள இந்திய பகுதிகளில் உள்ள அணையில் இருந்து வெளியேறும் தண்ணீருக்கு பங்களாதேஷில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கிற்கு தொடர்பு இல்லை என்று அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கும்டி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை
கும்டி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகள் இந்த ஆண்டின் மிக அதிக மழையை சில நாட்களில் எதிர்கொண்டதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் மேலும் விளக்கியுள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், கும்டி ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளிலும் பரவியுள்ளன. "வங்காளதேசத்தில் வெள்ளம் முதன்மையாக அணைக்கு கீழே உள்ள இந்த பெரிய நீர்ப்பிடிப்புகளில் இருந்து வந்த தண்ணீர் காரணமாக உள்ளது" என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியது. இரண்டு நாடுகளும் 54 பொதுவான எல்லை தாண்டிய நதிகளைப் பகிர்ந்து கொள்வதால், நதி நீர் ஒத்துழைப்பு இருதரப்பு உறவின் முக்கிய பகுதி என்பதையும் அமைச்சகம் கோடிட்டுக் காட்டியது.