சுத்தமான நகரில் சோகம்: அசுத்தமான குடிநீரால் 7 பேர் உயிரிழப்பு, 149 பேர் கவலைக்கிடம்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவின் 'தூய்மையான நகரம்' எனப் புகழப்படும் மத்தியப் பிரதேசத்தின் இந்தூர் நகரில், அசுத்தமான குடிநீரால் ஏற்பட்ட பாதிப்புகள் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளன. இன்று (ஜனவரி 1) 6 மாதக் குழந்தை ஒன்று பலியானதை தொடர்ந்து, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது. சுனில் சாஹு என்பவரின் குழந்தை, அசுத்தமான நீர் கலந்த பாலைக் குடித்த பிறகு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அக்குழந்தை இன்று உயிரிழந்தது. சுமார் 10 ஆண்டுகள் காத்திருந்து பிறந்த குழந்தை என்பதால் அக்குடும்பம் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இதுவரை இப்பகுதியில் 149 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எனினும், உள்ளூர் மக்களின் கூற்றுப்படி பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,100-க்கும் மேல் இருக்கலாம் எனத் தெரிகிறது.
காரணம்
அசுத்தமான குடிநீரின் காரணம் மற்றும் அரசின் நடவடிக்கை
குடிநீர் விநியோகம் செய்யப்படும் குழாய்களில் கழிவுநீர் (Sewer leakage) கலந்ததே இந்த விபரீதத்திற்கு முக்கியக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கழிப்பறைக்கு அடியில் இருந்த பிரதான நீர் குழாயில் ஏற்பட்ட கசிவு காரணமாக இந்த சம்பவம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த வழக்கு தொடர்பாக ஒரு அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும், மேலும் நகராட்சி மண்டல அதிகாரி மற்றும் ஒரு உதவிப் பொறியாளர் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா அறிவித்துள்ளார். மத்தியப் பிரதேச முதல்வர் மோகன் யாதவ் இன்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளார்.