Page Loader
இந்தியாவின் இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் அமைச்சர் ராஜ்நாத் சிங்
ஐஎன்எஸ் அரிகாட்

இந்தியாவின் இரண்டாவது அணுசக்தி நீர்மூழ்கி கப்பலை இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார் அமைச்சர் ராஜ்நாத் சிங்

எழுதியவர் Sekar Chinnappan
Aug 29, 2024
10:50 am

செய்தி முன்னோட்டம்

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், விசாகப்பட்டினத்தில் வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) நடைபெறும் நிகழ்வில், உயர் கடற்படை அதிகாரிகள் முன்னிலையில் இந்தியாவின் இரண்டாவது அணுசக்தியால் இயங்கும் பாலிஸ்டிக் ஏவுகணை நீர்மூழ்கிக் கப்பலான (SSBN), எஸ்-3 எனப்படும் ஐஎன்எஸ் அரிகாட்டை நாட்டிற்கு அர்ப்பணிக்கிறார். இந்த நிகழ்வில் கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஷ் திரிபாதி, இந்திய மூலோபாயக் கட்டளைத் தலைவர் வைஸ் அட்மிரல் சூரஜ் பெர்ரி மற்றும் டிஆர்டிஓ உயர் அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர். SSBN இந்தியாவின் மூலோபாய கட்டளையின் கீழ் செயல்படும். இந்தியா ஏற்கனவே அக்னி தொடர் போன்ற நில அடிப்படையிலான அணு ஏவுகணைகள் மற்றும் வான்வழி அணுசக்தி திறன் ஆகியவற்றைக் கொண்டிருப்பதால், அணுசக்தி முக்கோணத்தில் SSBN இந்தியாவின் சக்தியை மேலும் வலுவாக்கியுள்ளது.

திட்டம்

இந்திய பாதுகாப்புத் துரையின் அடுத்த திட்டம்

இரண்டு அணுசக்தி நீர்மூழ்கி பாலிஸ்டிக் ஏவுகணை கப்பல்களை இந்தியா தயாரித்துள்ள நிலையில், ஐஎன்எஸ் அரிடாமன் எனப் பெயரிடப்பட்டுள்ள மூன்றாவது SSBN அடுத்த ஆண்டு தொடங்கப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து பெயர் வைக்கப்படாத நான்காவது SSBN கப்பல் திட்டத்தையும் தொடங்க உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையே, அணுசக்தியில் இயங்கும் இரண்டு வழக்கமான ஆயுதம் தாங்கிய நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு (SSNs) அனுமதி கோரி இந்திய கடற்படை ஏற்கனவே மத்திய அரசிற்கு முன்மொழிவை கொடுத்துள்ளது. இரண்டு SSBNகள் இந்தியாவுக்கு எதிராக கடலில் மோத நினைக்கும் எந்த கடற்படைக்கும் சிம்ம சொப்பனமாக செயல்பட முடியும். மேலும், சீனாவைக் கருத்தில் கொண்டு, இந்தோ-பசிபிக்கின் மையத்தில் இந்தியாவிற்கு இரண்டு SSBN களும் மிகப்பெரிய மூலோபாய செல்வாக்கை வழங்கும்.