'ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 21 உயிர்கள் பலி': இந்தியாவில் புதிய உச்சத்தைத் தொட்ட சாலை விபத்து மரணங்கள்
செய்தி முன்னோட்டம்
இந்தியாவில் 2025-ஆம் ஆண்டில் நாட்டில் சாலை விபத்து மரணங்கள் 1,83,382 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு மக்களவையில் அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. மக்களவையில் காங்கிரஸ் எம்பி பென்னி பெஹனான் கேட்ட கேள்விக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அளித்த எழுத்துப்பூர்வ பதிலில், 2024-ஆம் ஆண்டில் பதிவான 1,77,175 மரணங்களுடன் ஒப்பிடுகையில், 2025-இல் உயிரிழப்புகள் 3.5% அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மொத்த விபத்துகளின் எண்ணிக்கை 5.3% உயர்ந்து 5,13,563 ஆகப் பதிவாகியுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு பதிவான 1,46,133 உயிரிழப்புகளுடன் ஒப்பிடும்போது, கடந்த பத்தாண்டுகளில் சாலை விபத்து மரணங்கள் 25.5% அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
நிலவரம்
மாநிலங்கள் வாரியான உயிரிழப்பு நிலவரம்
உத்தர பிரதேசத்தில் சாலை விபத்து மரணங்கள் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளன.
அங்கு உயிரிழப்புகள் 24,118-லிருந்து 27,550 ஆக அதிகரித்துள்ளது.
பீகார், மகாராஷ்டிரா மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களிலும் மரணங்கள் உயர்ந்துள்ளன.
அதேவேளையில், பஞ்சாப்பில் சாலை விபத்து மரணங்கள் 4,759-லிருந்து 3,062 ஆகக் கணிசமாகக் குறைந்துள்ளன.
சத்தீஸ்கர், கர்நாடகா, தெலங்கானா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களிலும் உயிரிழப்புகளின் எண்ணிக்கை சரிவைக் கண்டுள்ளது.
ஈ-ரிக்ஷா
ஈ-ரிக்ஷாக்களில் சைபர் பாதுகாப்பு அச்சுறுத்தல்
மின்சார மூன்று சக்கர வாகனங்களில் (ஈ-ரிக்ஷா) உள்ள பேட்டரி மேலாண்மை அமைப்பில் (BMS) சைபர் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதை இந்திய கணினி அவசரக்கால உதவி மையம் (CERT-In) கண்டறிந்துள்ளது.
இதை பயன்படுத்தி மொபைல் ஆப் மூலமாக ஓடிக்கொண்டிருக்கும் வாகனங்களை திடீரென நிறுத்த முடியும் என்பதால், அத்தகைய செயலிகளைச் செயலிழக்கச் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதைக் கட்டுப்படுத்த ஐநா விதிகளுக்கு இணையான புதிய சைபர் பாதுகாப்பு நடைமுறைகளுக்கான வரைவு விதிகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.