இஸ்ரேல்-ஹமாஸ் போர்நிறுத்த வாக்கெடுப்பில் கலந்துகொள்ள இந்தியா ஏன் மறுத்தது?
இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் உடனடி மனிதாபிமான போர்நிறுத்தம் கோரும் தீர்மானத்திற்கு ஐநா பொதுச் சபையில் இந்தியா வாக்களிக்கவில்லை. இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் உடனடியாக மனிதாபிமான போர்நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கோரி ஜோர்டான் ஒரு வரைவுத் தீர்மானத்தை ஐநா பொதுச் சபையில் சமர்ப்பித்திருந்தது. இந்நிலையில், இதற்கான வாக்கெடுப்பு நேற்று நடத்தப்பட்டது. ஆனால், இந்த தீர்மானத்தில் ஹமாஸ் பயங்கரவாதக் குழுவைப் பற்றி எதுவும் குறிப்பிடாததால், இந்தியா இந்த வாக்கெடுப்பில் பங்குபெற மறுத்துவிட்டது. காசா பகுதிக்கு தேவையான அனைத்து நிவாரண மற்றும் மருத்துவ உதவிகளை உடனடியாக செய்ய வேண்டும் என்றும் இந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பங்களாதேஷ், மாலத்தீவுகள், பாகிஸ்தான், ரஷ்யா மற்றும் தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட 40 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்திருந்தன.
பெரும்பான்மையான நாடுகள் போர் நிறுத்த தீர்மானத்திற்கு ஆதரவு
இந்தியாவைத் தவிர, ஆஸ்திரேலியா, கனடா, ஜெர்மனி, ஜப்பான், உக்ரைன் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளும் இந்த வாக்கெடுப்பில் பங்குபெறவில்லை. "பொதுமக்களின் பாதுகாப்பு, சட்ட மற்றும் மனிதாபிமான கடமைகளை நிலைநிறுத்துதல்" என்ற தலைப்பில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக 120 நாடுகளும், அதற்கு எதிராக 14 நாடுகளும் வாக்களித்திருந்தன. இந்தியா உட்பட 45 நாடுகள் அதற்கு வாக்களிக்கவில்லை. பெரும்பானமையான நாடுகள் அந்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்டதால், அது ஐநா சபையில் நிறைவேற்றப்பட்டது. எனினும், இந்த போர் நிறுத்தம் எப்படி செயல்படுத்தப்படும் என்பது இன்னும் சரியாக தெரியவில்லை. இதற்கிடையில், காசா பகுதியில் மேலும் தரைவழி தாக்குதல் நடத்த உள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. மேலும், இஸ்ரேலுக்கு எதிராக முப்படைகளையும் ஏவ உள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.