நாட்டின் மரியாதையை காக்க, LOC கடக்க தயார்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
நேற்று, 'கார்கில் விஜய் திவாஸ்', கார்கில் போரின் 24-வது வெற்றி தினம் கொண்டாடப்பட்டது. இந்த நாளில், கார்கில் போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு, குடியரசு தலைவர், பிரதமர் மோடி உட்பட அரசியல் தலைவர்கள் பலரும் அஞ்சலி செலுத்தினர். மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், லடாக்கிலுள்ள கார்கில் போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார். அப்போது, ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே, கடற்படை தலைமை தளபதி ஹரிகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தொடர்ந்து ராணுவ வீரர்களுடன் உரையாடிய ராஜ்நாத் சிங், "கார்கில் போர் இந்தியாவின் மீது திணிக்கப்பட்டது. பாகிஸ்தானால் முதுகில் குத்தப்பட்டோம். நாட்டுக்காக தங்கள் உயிரை தியாகம் செய்த எங்கள் துணிச்சலான வீர மகன்களுக்கு நான் வணக்கம் செலுத்துகிறேன்" எனக்கூறினார்.
"பொதுமக்கள், நேரடியாக பாதுகாப்புப்படையினருக்கு ஆதரவளிக்க வேண்டும்"
தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங், " போர் சூழல் ஏற்படும்போதெல்லாம், பொது மக்கள் எப்போதும் படைகளுக்கு ஆதரவு வழங்கினாலும் அந்த ஆதரவு மறைமுகமாகவே இருந்துள்ளது. தேவை ஏற்பட்டால் நேரடியாக போர்க்களத்தில் பாதுகாப்புப்படையினருக்கு ஆதரவளிக்க பொது மக்கள் தயாராக இருக்க வேண்டும்", எனக்கூறினார். அதுமட்டுமின்றி, "இந்தியா அமைதியை விரும்புவதால்தான், கார்கில் போரில் வென்ற போதும் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை நமது ராணுவம் தாண்டி செல்லவில்லை. எனினும், நாட்டின் கவுரவத்தையும், கண்ணியத்தையும் காக்க நாம் எந்த எல்லைக்கும் செல்லலாம். நாட்டின் மரியாதையையும், கண்ணியத்தையும் காப்பாற்ற ஜம்மு- காஷ்மீரில் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை (LoC) கடக்கத் தயாராக உள்ளோம்" என்று கூறினார் ராஜ்நாத் சிங்.