Page Loader
உலக கண்டுபிடிப்பு குறியீடு 2024: 9 ஆண்டுகளில் 42 இடங்கள் முன்னேறியது இந்தியா
உலக கண்டுபிடிப்பு குறியீட்டில் 39வது இடத்திற்கு இந்தியா முன்னேற்றம்

உலக கண்டுபிடிப்பு குறியீடு 2024: 9 ஆண்டுகளில் 42 இடங்கள் முன்னேறியது இந்தியா

எழுதியவர் Sekar Chinnappan
Sep 27, 2024
07:31 pm

செய்தி முன்னோட்டம்

உலக கண்டுபிடிப்பு குறியீடு (ஜிஐஐ) 2024 வெளியிடப்பட்டுள்ள நிலையில், இந்தியா தற்போது ஒரு இடம் முன்னேறி, உலகின் 133 பொருளாதாரங்களில் 39வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. ஜெனிவாவை தளமாகக் கொண்ட உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், மத்திய மற்றும் தெற்கு ஆசியாவில் உள்ள 10 பொருளாதாரங்களில் இந்தியா தொடர்ந்து முதலிடத்திலும், குறைந்த நடுத்தர வருமானம் கொண்ட பொருளாதாரங்களில் முதல் இடத்திலும் தொடர்கிறது. கடந்த ஆண்டு உலகளாவிய கண்டுபிடிப்பு குறியீட்டு தரவரிசையில் இந்தியா 40வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்ததோடு, இந்தியாவின் கண்டுபிடிப்புகள் கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோரால் இயக்கப்படுகிறது எனத் தெரிவித்தார்.

உலக கண்டுபிடிப்புக் குறியீடு

உலக கண்டுபிடிப்புக் குறியீடு என்றால் என்ன?

ஜிஐஐ தரவரிசையில் நிலையான முன்னேற்றம், அறிவு மூலதனம், துடிப்பான ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஏற்ற சூழல் அமைப்பு மற்றும் பொது மற்றும் தனியார் ஆராய்ச்சி நிறுவனங்களால் செய்யப்பட்ட அற்புதமான பணி ஆகியவற்றின் காரணமாகும். ஜிஐஐ என்பது உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்களுக்கு அந்தந்த நாடுகளில் உள்ள புதுமைகள் சார்ந்த சமூக மற்றும் பொருளாதார மாற்றங்களை மதிப்பிடுவதற்கான நம்பகமான கருவியாகும். இந்த குறியீட்டில் கடந்த 9 ஆண்டுகளில் இந்தியா மிக வேகமாக முன்னேறி வருகிறது. குறிப்பாக 2015இல் 81வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 42 இடங்கள் முன்னேறி 39வது இடத்திற்கு வந்துள்ளது. இந்தியாவின் பலம் ஐ.சி.டி சேவைகள் ஏற்றுமதி, துணிகர மூலதனம் போன்ற முக்கிய குறிகாட்டிகளில் உள்ளது.