LOADING...
இந்தியா முன்னேறினால்தான் உலகம் அமைதியாக இருக்கும்; ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் கருத்து
இந்தியா முன்னேறினால் உலகமே அமைதியடையும் என ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் கருத்து

இந்தியா முன்னேறினால்தான் உலகம் அமைதியாக இருக்கும்; ஐரோப்பிய ஒன்றியத் தலைவர் கருத்து

எழுதியவர் Sekar Chinnappan
Jan 26, 2026
07:54 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவின் 77 வது குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன், இந்தியாவின் வளர்ச்சியை வெகுவாகப் பாராட்டியுள்ளார். "வெற்றிகரமான இந்தியா என்பது உலகை மிகவும் நிலையானதாகவும், வளமானதாகவும், பாதுகாப்பானதாகவும் மாற்றும். இதன் மூலம் உலக நாடுகள் அனைத்தும் பலன்பெறும்" என்று அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். சுமார் 19 ஆண்டுகளாக (2007 முதல்) இழுபறியில் இருந்த இந்தியா - ஐரோப்பிய ஒன்றியத்தின் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம், ஜனவரி 27 அன்று நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் இறுதி செய்யப்பட உள்ளது.

ஒப்பந்தம்

ஒப்பந்தம் மூலம் வர்த்தகம் பல மடங்கு அதிகரிக்கும்

2023-24 நிதியாண்டில் இந்தியா - ஐரோப்பிய ஒன்றியம் இடையேயான வர்த்தகம் 135 பில்லியன் டாலராக உள்ளது. இந்த வர்த்தக ஒப்பந்தம் மூலம் இது பல மடங்கு அதிகரிக்கும். அமெரிக்காவின் புதிய வரி விதிப்புக் கொள்கைகளால் இந்தியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த இருதரப்பு ஒப்பந்தம் இருவருக்குமே ஒரு பாதுகாப்பான பொருளாதாரப் பாதையை அமைத்துக் கொடுக்கும். இந்த வர்த்தக ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஐரோப்பாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கார்கள் மீதான வரியை இந்தியா கணிசமாகக் குறைக்க முன்வந்துள்ளது. தற்போது 110 சதவீதமாக இருக்கும் இறக்குமதி வரி, உடனடியாக 40 சதவீதமாகக் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. சுமார் ரூ.16.3 லட்சம் மதிப்பிற்கு மேல் உள்ள கார்களுக்கு இந்த வரிச் சலுகை பொருந்தும்.

ராணுவம்

பாதுகாப்பு மற்றும் ராணுவக் கூட்டுறவு

வர்த்தகம் மட்டுமின்றி, பாதுகாப்புத் துறையிலும் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளன. குடியரசு தின அணிவகுப்பில் முதன்முறையாக ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படை வீரர்கள் பங்கேற்று நமது நட்புறவைப் பறைசாற்றினர். கடல்சார் பாதுகாப்பு, இணையப் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் இணைந்து செயல்பட இந்தியா - ஐரோப்பிய ஒன்றிய பாதுகாப்பு மற்றும் தற்காப்புப் பங்களிப்பு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. ஐரோப்பியத் தலைவர்களின் வருகை இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் என்றும், இது பகிரப்பட்ட விழுமியங்களுக்கான அங்கீகாரம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Advertisement