மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்தியாவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது: மோர்கன் ஸ்டான்லி
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, உலகளாவிய வளர்ச்சியில் இந்தியா பெரும் பங்கு வகிக்க தொடங்கியுள்ளது என்று மோர்கன் ஸ்டான்லி கூறி இருக்கிறது. வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவும் அவநம்பிக்கையால், அவர்கள் 2014 முதல் இந்தியாவில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க மாற்றங்களை பற்றி அறியாமல் இந்தியாவை புறக்கணித்து கொண்டிருக்கிறார்கள், என்று மோர்கன் ஸ்டான்லி வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மோர்கன் ஸ்டான்லி என்பது அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு முதலீட்டு வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனமாகும். இது நியூயார்க் நகரத்தின் மிட் டவுன் மன்ஹாட்டனை தலைமையிடமாகக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், 2014-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு ஏற்பட்ட 10 பெரிய மாற்றங்கள் பட்டியலிடபட்டுள்ளது
மோர்கன் ஸ்டான்லியின் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
2013க்கு பிறகு இந்தியாவில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. 10 ஆண்டுகளுக்குள், மேக்ரோ மற்றும் சந்தைக் கண்ணோட்டத்தில் இந்தியா பெரும் அளவு வளர்ச்சியடைந்துள்ளது. இதனால், இந்தியாவுக்கு உலக அரங்கில் ஒரு குறிப்பிடத்தக்க இடமும் கிடைத்துள்ளது. பிற நாடுகளுக்கு இணையாக கார்ப்பரேட் வரியைக் கொண்டு வந்து, நாட்டின் தொழில்நுட்ப வசதியை வேகமாக மேம்படுத்தியது, இந்தியாவின் மாற்றங்களில் பெரும் பங்கு வகிக்கிறது. மேலும், ஜிஎஸ்டியால் அதிகரித்து வரும் வசூல், உயர்ந்து வரும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளால் ஏற்படும் ஜிடிபியின் வளர்ச்சி ஆகியவை இந்தியாவின் பொருளாதார முறைப்படுத்துதலை காட்டுகிறது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் மூலதனச் செலவினம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. ஏற்றுமதி சந்தையின் மதிப்பு 2031க்குள் 4.5 சதவீதமாக உயரும்.