LOADING...
வெனிசுலா விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை கவலை; அமைதியாக பேசித் தீர்க்க வலியுறுத்தல்
வெனிசுலா விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை கவலை

வெனிசுலா விவகாரம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை கவலை; அமைதியாக பேசித் தீர்க்க வலியுறுத்தல்

எழுதியவர் Sekar Chinnappan
Jan 04, 2026
03:27 pm

செய்தி முன்னோட்டம்

அமெரிக்கப் படைகள் வெனிசுலா மீது வான்வழித் தாக்குதல் நடத்தி, அந்த நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்துள்ள விவகாரம் குறித்து இந்தியா தனது ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது. இப்பிரச்சினையை அமைதியான முறையில் தீர்க்க வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள தற்போதைய மாற்றங்கள் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் மிகுந்த கவலையளிப்பதாக தெரிவித்துள்ளது. அங்குள்ள சூழலைத் தொடர்ந்து உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும் கூறியுள்ளது. அமெரிக்கா மற்றும் வெனிசுலா அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்திப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. லத்தீன் அமெரிக்கப் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய வேண்டியது அவசியம் என இந்தியா சுட்டிக்காட்டியுள்ளது.

பாதுகாப்பு

இந்தியக் குடிமக்களின் பாதுகாப்பு

கராகஸில் உள்ள இந்தியத் தூதரகம் அங்கு வசிக்கும் இந்தியக் குடிமக்களுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளது. அவர்களுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருப்பதாக அரசு உறுதியளித்துள்ளது. ஏற்கனவே இந்திய அரசு வெளியிட்ட அறிவுறுத்தலின்படி, இந்தியர்கள் வெனிசுலாவிற்குச் செல்லும் அவசியமற்றப் பயணங்களைத் தவிர்க்குமாறு மீண்டும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அமெரிக்காவின் டெல்டா ஃபோர்ஸ் படையினரால் பிடிக்கப்பட்ட அதிபர் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோர் தற்போது நியூயார்க்கிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். மதுரோ போதைப்பொருள் கடத்தல் தொடர்பான விசாரணையைச் சந்திப்பார் என்றும், ஒரு புதிய அரசு அமையும் வரை அமெரிக்காவே வெனிசுலாவை நிர்வகிக்கும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Advertisement