சீனாவுக்கு பதிலடி: இந்திய-சீன எல்லையில் சுற்றுலா தலங்களை அமைக்க இந்தியா முடிவு
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள எல்லையோர கிராமங்களை சிவில்-இராணுவ கூட்டாண்மை மூலம் சுற்றுலா மையங்களாக இந்தியா உருவாக்கி வருகிறது. உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டிற்கு(LAC) அருகே ஜியோகாங் என்ற கிராமங்களை அமைத்து சீனா தன் பலத்தை காட்டியது அடுத்து, அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியா இந்த முயற்சியை தொடங்கியுள்ளது. உள்ளூர் பொருளாதாரத்தை உயர்த்துவது மட்டுமல்லாமல் எல்லைக்கு அருகில் இந்தியாவின் ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதற்கு இந்த சுற்றுலா மையங்கள் உதவும் என்று இந்தியா நம்புகிறது. இந்த சுற்றுலா மையங்களில் ஹோம்ஸ்டேகள், ட்ரெக்கிங், முகாம்கள், சாகச விளையாட்டுகள் மற்றும் ஆன்மிக சுற்றுப்பயணங்கள் போன்றவை இருக்கும் என்று கூறப்படுகிறது. அருணாச்சல பிரதேசத்தில் இரண்டாம் உலகப் போரின் விமானங்கள் விபத்துக்குள்ளான இடங்களை சுற்றுலா தலமாக அறிவிப்பது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
சுற்றுலா பயணிகளுக்கு அழைப்பு விடுத்த உள்துறை அமைச்சர்
கிழக்கு அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இந்திய-சீன எல்லையில் இருக்கும் முதல் கிராமமான கஹோவில் ஹோம்ஸ்டேகள், கேம்பிங் தளங்கள், ஜிப்-லைன்கள் மற்றும் மலையேற்ற பாதைகளை உருவாக்கும் பணி ஏற்கனவே நடந்து வருகிறது. மாநிலத்தின் கிழக்குப் பகுதியில் உள்ள அஞ்சாவ் மாவட்டத்தின் பிற பகுதிகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தொலைதூரத்தில் இருக்கும் அருணாச்சல் மாநிலத்திற்கு செல்வதை எளிதாக்க, அட்வான்ஸ் லேண்டிங் மைதானமான வாலோங்கில் வணிக தரையிறங்கும் மைதானத்தை உருவாக்க மாநில நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சுற்றுலா பயணிகள் அருணாச்சல் மாநிலத்திற்கு சென்று அதன் அழகை ரசிக்க வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா சமீபத்தில் கூறி இருந்தார். சீனா கடந்த 9-10 ஆண்டுகளில் இந்திய-சீன எல்லையில் 600க்கும் மேற்பட்ட சியோகாங் கிராமங்களைக் கட்டியுள்ளது.