நாடாளுமன்ற சிறப்பு அமர்வு: பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளார் சோனியா காந்தி
செப்டம்பர்-18 முதல் 22 வரை நடைபெற இருக்கும் நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத் தொடரில் என்ன விவாதிக்கப்பட இருக்கிறது என்பது குறித்து அறிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுத உள்ளார். இந்த விஷயத்தில் அரசாங்கம் வெளிப்படைத் தன்மையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், நாட்டை இருளில் தள்ளக்கூடாது என்றும் INDIA கூட்டணியின் எதிர்க்கட்சிகள் நேற்று கோரிக்கை விடுத்தன. 33% பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதாவையும் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். ஏற்கனவே இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டுவிட்டதால், வரும் கூட்டத்தொடரின் போது, இந்த மசோதா மக்களவையிலும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதுவார் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.
INDIA கூட்டணி கட்சிகளின் முதல் கூட்டுப் பொதுக்கூட்டம்
எதிர்கட்சிகள் வரும் கூட்டத்தொடரில் ஒன்றிணைந்து அதானி விவகாரத்தையும் எழுப்ப முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், INDIA கூட்டணி கட்சிகளின் முதல் கூட்டுப் பொதுக்கூட்டத்தை மத்தியப் பிரதேசத்திலும், அதற்கு அடுத்த கூட்டத்தை போபாலிலும் நடத்த எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன. காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் இல்லத்தில் நடந்த இரவு விருந்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், வரவிருக்கும் நாடாளுமன்ற அமர்வின் போது கடைப்பிடிக்க வேண்டிய உத்திகள் குறித்தும் விவாதித்தனர். நாடாளுமன்ற அமர்வில் என்ன விவாதிப்பட போகிறது என்பதை தெளிவுபடுத்தாமலேயே நரேந்திர மோடி அரசு, நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை முதன்முறையாகக் கூட்டுகிறது என்று கார்கே விமர்சித்துள்ளார்.